வெணதுகினம்

திங்கள், 8 டிசம்பர், 2025

அக்கினி சுகுமாரன்


 'நிலம் மறப்பதில்லை.. மரம் விதைத்த விதைகளை!’

----------


 


ஓர் எளிய சொல்லின் பொருள் அதற்குரிய பொருளில் உருவகப்படுத்தப்பட்டு அதற்குள்ளே அடங்கிவிடுகிறது. எளிய சொல் ஒன்றை ஒளிரச் செய்யும் வல்லமை கவிஞனுக்கு மட்டுமே வாய்க்கிறது.


ஒரு சொல்லைத் தியானம்போல் பாவித்து , ஒரு சொல்லை இருளில் கிழித்தெழும் பொன்னொளியென  ஆராதித்துக் கொண்டாட கவிஞனால் மட்டுமே முடியும். சொல்லின் மாய வித்தை அறிந்த அக்கினியின் விரல்கள் மலேசியப் புதுக்கவிதை  இலக்கியத்தின் கரையுடைத்து   அலைகளைக் கிளர்ந்தெழச்  செய்தன.


மரம் மறந்திருக்கலாம் அது சொறிந்த இலைகளை… 

நிலம்  மறப்பதில்லை மரம் விதைத்த விதைகளை. 

அக்கினியின் கவிதை வீச்சில் எழுந்த அந்தத் தலைமுறையினர் இன்றும் அதனை மறவாது நினைவு  கூருகிறார்கள்.. தமிழகத்தின் வானம்பாடி கவிஞர்களின் எழுச்சி மலேசியாவிலும்  அந்தத் தாகத்தைத் தந்த காலம் அது.


தமிழ் மலர் பத்திரிகையில் அக்கினி பணிபுரிந்த காலகட்டத்தில் வாரம் ஒருமுறை  ‘புதன்மலர்’ என்று ஒரு பக்கம் அன்றைய துணையாசிரியர் ஒருவரால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனையே தங்களது களமாக ஆக்கிக் கொண்டதாகவும்  ஆதி குமணனின்  இலக்கிய விமர்சனமும்  இவரின் கவிதையும் அப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டதாகவும் ‘ஈரம்’ தொகுப்பிற்கு அக்கினி வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

 “அப்போது மலேசியாவில் புதுக்கவிதைக்கென்று இருந்த ஒரு களம்  ‘ புதன் மலர்’ மட்டுமே” என்றும் கூறியிருந்தார்.  

அந்தச் சிறுதுளி பின்னர்  புதுக்கவிதைச்  சூறாவளியை உருவாக்கியது. அக்காலகட்டத்தில் பெரும்பாலான  அக்கினியின் கவிதைகள் வாசர்களிடையே புதுக்கவிதையினபால் ஆவலையும்  அதனை எழுதும்  ஆர்வத்தையும் உருவாக்கியவை.  அவரின் கவிதைகள்  எற்படுத்தியிருந்த தாக்கத்தைப் புதுக்கவிதையின் காதலர்கள் நிச்சயம் அறிவார்கள். புதுக்கவிதையின் வரலாற்றைக் கவிஞர்களின் பேட்டியின் வாயிலாக பதிவாக்கும்  எண்ணத்துடன்  தொகுக்கபட்ட  ‘ஈரம்’ தொகுப்பில்    பலர் இதனைப் பகிர்ந்திருக்கின்றனர்.


சுகுமாரன் என்ற இளைஞன் பத்திரிகைத் துறையில் கால் பதித்துப் பின்னர்  தன்னைக் கவிஞர் அக்கினியென செதுக்கிக் கொண்டது புதுக்கவிதையின் அவதானிப்பிற்காகக் காலம் செய்த  கட்டாயம் என்றே தெரிகிறது. இன்று புதுக்கவிதையின் முன்னோடிகளில் முதன்மையானவராக அக்கினி சரித்திரத்தில்  எழுதப்பட்டிருக்கிறார்.


என்னதான் அவர் பத்திரிகை தொழிலில் பிற வடிவங்களில் எழுதியிருந்தாலும் அதன்வழி புகழை அடைந்திருந்தாலும் அக்கினி என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது கவிதை என்ற சொல் மாத்திரமே. அக்கினி என்ற நாமத்தின் ஒளிப் பிழம்பு கவிதையோடு மட்டுமே அதிகமாக  வெளிச்சமிடப்பட்டு ஒளிர்கிறது.


கவிஞன் என்பவன் அகமொழியாலும் புறமொழியாலும் சமூதாயத்தை ஒட்டியே வாழ்பவன்  என்பதை அக்கினியின் கவிதைகள் நிருபித்துள்ளன. காதல் கவிதையில் கூட அவர் தான் சமூதாயத்தின் எழ்மையை எடுத்துரைக்கிறார். 


 

‘என் சமூதயம் போல்

ஏக்கங்களால்

இளைத்து விட்டேனே

என்றெல்லாம் வருந்தாதே!


எனது விலா எலும்புகளில்

விளக்கத்தைப்

பிறர் பார்க்கலாம்

கேலியால் பூரிக்கலாம்!


கண்ணே

அணு அணுவாய்

வளர்ந்து நிற்கும்

என் ஆன்மாவை

உனையன்றி

வேறு யாருக்குப்புரியும்! .  

               - அக்கினி


மலேசியப் புதுக்கவிதை இலக்கியத்தில் தேவதச்சனாக எழுந்த அக்கினி மேலும் கவிதையுடனேயே  நிலைபெற்றிருந்தால், மலேசியப் புதுக்கவிதை இலக்கியத்தின் பயணத்தை ஒளி வீச்சுடன் செதுக்கியிருக்கலாம். தமிழகக் கவிதைத் தொகுப்பிற்கு இணையாக இங்கும் பல தொகுப்புகளை  உருவாக்கியிருக்கலாம்.


ஒரு கவிஞனை செயலிழக்கச் செய்யும் வாழ்க்கை  யதார்த்தங்கள் அல்லது தொழில் சார்ந்த கட்டாயங்கள்  அவருக்கும் நிகழ்ந்தது கவிதைக்குப் பேரிழப்பே. நிரந்தர ஊடகவியலாளனாக மாறிய அவர்.. அவருக்குள்ளிருந்த  கவிஞனை அடக்கி வைத்துவிட்டார். 


எனினும் அவருள் வாழ்ந்துகொண்டிருந்த கவிஞன்,  உரையாடல்களில் சொற்களாய்  உலாவரத்  தவறியதில்லை.  நல்ல கவிதையை வாசிக்க நேருகையில் அதனைக் கொண்டாடாமல் இருந்ததில்லை. அக்கினி என்ற படைப்பாளிக்குப் பல முகங்கள் இருந்தாலும் கவிஞர் என்ற முகத்தையே பலரும் நெருக்கமாய் உணர்ந்திருந்தார்கள். இன்று கொண்டாடவும் செய்கிறார்கள். அக்கினியும் அதே கவிதா முகத்தையே நேசித்திருப்பார் என்றே  எண்ணுகிறேன்.


 அக்கினியின் ‘கனா மகுடங்கள்’ அன்றைய தமிழ்நாட்டுக் கவிதை தொகுப்பிற்கு இணையாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. ஆயினும் அது அடுத்தடுத்த தலைமுறையின் பார்வைக்கு  எட்டியதா என்பதை நான் அறியேன். அந்தத் தொகுப்பும் அவரின் இன்னப் பிற கவிதைகளும் வாசகப் பரப்பிற்கு அறிமுகமாக  வேண்டும். அப்போதுதான் நம்மோடு  வாழ்ந்ததும் இப்போது  நாம் இழந்ததும் ஒரு சராசரி கவிஞரை அல்ல என்பதை நம்மால் உணர முடியும்.  ‘கனா மகுடங்கள்’ கவிதைகளுடன் அவரின் பிற கவிதைகளையும்  இணைத்து இத்தொகுப்பு வெளிவருவதில் பெருமகிழ்ச்சி.  மலேசியப் புதுக்கவிதை இலக்கியத்தில் அக்கினி என்ற பெயர் கவிதையாகவே ஒளிர அவரின் துணைவியாரின் இம்முயற்சி பெரும் பங்களிக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை. நன்றி.


 


-        வாணிஜெயம்