வெணதுகினம்

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

ஆதி இராஜகுமாரன்

 



  
(3)

ஞானரதம்

------

2012  இல்   'மழையும் உலர்ந்திடாத ஈரமும்' புதுக்கவிதை வரலாறு சார்ந்த   நேர்காணல் தொடரை வாசித்து வந்த கோ.முனியாண்டி அவர்கள் என்னை அழைத்து "இராஜகுமாரனையும் இத்தொடரில் நேர்காணல் செய்யுங்கள்" என்றார். எனக்குள் இந்த எண்ணம் ஏற்கனவே இருந்தது.  தயக்கம் காரணமாக செயலில் இறங்கவில்லை.  கோமு அவர்களின் ஆலோசனையையும்  அவ்விதமே தயக்கத்தினால் ஆறப்போட்டிருந்தேன். 

அவ்வருடம் இராஜகுமாரன் அவர்களின் பிறந்த நாளின் போது (28/7/2014)  "இன்று இராஜகுமாரன் அவர்களுக்குப் பிறந்தநாள். வாழ்த்து தெரிவிக்கவும்’ என்ற குறுஞ்செய்தி கோமு சாரிடமிருந்து வந்திருந்தது. 

என் வாழ்த்தை இராஜகுமாரன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். மறுநொடியில் அவரிடமிருந்து நன்றி என்று பதில் வந்தது. இராஜகுமாரன் அவர்களிடமிருந்து வந்திருந்த அச்சிறிய குறுஞ்செய்தி என்னை மகிழ்ச்சியடைய  வைத்தது . மறு குருஞ்செய்தி அனுப்பி பேச அனுமதி கேட்டேன். அவரிடமிருந்து அனுமதி  கிடைத்ததும் அழைத்து என் எண்ணத்தை  தயக்கத்துடன் கூறினேன். 

“ தினக்குரலில் உங்கள் தொடர் நேர்காணலை வாசித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. ஆனால் என்னிடமிருந்து எந்தப் பதிவையும் எதிர்பார்க்காதீர்கள்" என்றார்.  

அவரின் மறுப்பை மறுக்கும் வகையில் நான் ஏதோ சொன்னேன். அவர் மீண்டும் மறுத்தார். நான் பதிலேதும் பேசாது  அமைதியானேன்.  

என் மௌனத்தை புரிந்து கொண்டு ,  “வருத்தப்படாதீர்கள்,  ஒருநாள் என்னைப் பற்றி நீங்கள் எழுதுவீர்கள். நிச்சயம்  எழுதுவீர்கள் என்று நான் நம்புகின்றேன். அது என் காலத்திற்குப் பிறகாக  அமைந்திருக்கும்” என்றார்.

“ சார், நீங்கள் மறுத்ததில்  கூட எனக்கு வருத்தம் இல்லை. இப்படி பிறந்தநாள் அதுவும் இறப்பைப் பற்றிப் பேசுவது வருந்த வைக்கிறது ” என்றேன்.

“ இதில் வருந்த ஏதும் இல்லை” என்று அவர் உரையாடலை முடித்தார். 

அந்த உரையாடலை நான் மறந்தே விட்டேன். ஆனால் இராஜகுமாரன் அவர்கள் அதனை நினைவில் வைத்திருந்து  ஓர் உரையாடலில் ஞாபகப்படுத்திப் பேசினார்.

 “அன்று உங்களை வருந்த வைத்து விட்டேன் என்று வருத்தப்பட்டேன் . அப்படி பேசியிருக்க கூடாதோ என்றும் நினைத்தேன். நல்ல விதமாக மறுத்திருக்கலாம்” என்றார். 

எதிராளியின் மனதை நினைத்து பார்ப்பது அவரின் அன்பு மனதின் இயல்பு என்பதை பின்னர் சில சம்பவங்களில் உணர்ந்திருக்கிறேன்.

முதல் உரையாடலில் அவர் உதிர்த்த சொற்கள்  நிதர்சனமாகியிருக்கிறது.  சில சொற்கள் பிரபஞ்சத்தின் வெளியில் தங்கி விடுகின்றது. அங்கேயே  காத்திருக்கின்றன. காத்திருந்து மீண்டும் நம்மை வந்தடைந்து செயல் படவைக்கின்றன.

அதுவே அவர்  குறித்து நான் தொகுத்த நூலுக்கும் நேர்ந்தது. அப்படியொரு நூல் முயற்சியைக் குழுவில்  யாரும் முடிவு செய்யவில்லை. அவரைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்த மட்டுமே முடிவெடுத்தோம். அதனை அறிந்து அவர் தடுத்து விட்டார். குழுவில்  ஆதி இராஜகுமாரன் உருவாக்கிய எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர் மீது பெரும் மதிப்பும் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் ஒத்துழைக்க முன் வந்ததை போன்றே இராஜகுமாரன் அவர்களின்  மனம் வருந்தும் வகையில் அவரை மீறி அவருக்கான நிகழ்ச்சி  செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.  

நான் அதனை ஏற்றுக்கொண்டாலும்  அவர் குறித்து எழுத்திலாவது கொண்டுவர நினைத்தேன்.   அவர்களின் புதல்வி நயனதாராவை அழைத்து உதவி நாடினேன். 

 


"அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காது, அக்கா. ஆனால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது செய்யாவிட்டால் பின் எப்போது செய்வது? யார் செய்வது? " என்றார். தேவையான உதவிகள் செய்வதாகவும்  சொன்னார். அது போன்றே அந்த நூலில் இடம்பெற்ற புகைப்படங்களையெல்லாம் தேடிக் கொடுத்தார்.முகப்புப் படத்திற்காக புகைப்படம் ஒன்றையும் புதிதாகப் பிடித்துக் கொடுத்தார்.

 அந்த நூலை மழைச்சாரல் புலனத்தின் முதல் நிகழ்ச்சியான இலக்கியச் சந்திப்பிற்கு வந்திருந்த  அனைவருக்கும் இலவசமாகப் பகிர்ந்தோம்.

அந்த நூல்   இராஜகுமாரன் அவர்களின்  மனதை எந்த வகையில் பாதித்தது என்று தெரியவில்லை. அன்று நிகழ்ச்சி முடிந்து போகும் போது அவரின் முகம் இறுக்கமாக இருந்தது. அதன் பின் அவருடன் நடந்த உரையாடல்களில் ஒரு முறை கூட அந்த நூல் குறித்து அவர் பேசவில்லை. நானும் மறந்தும் அதனைத் தொட்டு பேசியதில்லை. 

அவருக்கு ஏதும் கோபம் இருக்கலாமென்ற ஐயத்தில்  ஒரு தரம் அவர் மகள் தாராவிடம்  கேட்டிருந்தேன்.

“அப்படி ஏதும் இல்லை அக்கா, உங்களிடம்  அப்பாவிற்கு ஒரு கடன் இருக்கிறதாம். அதனை நிறைவேற்றிய பின்தான்,  அவர் அந்த நூலை வாசிப்பாராம்” என்றார். அதுபோன்றே அவரின் மறைவிற்கு இரு மாதங்களுக்கு முன்பாக அவரின் கடனைத் தீர்த்த பின்னர் 'இலக்கியத்தில் ஒரு ஞானரதத்தை' வாசித்தார். 



அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்த சூழலில் அந்த நூல் குறித்த விமர்சனத்தை வைத்தார். கட்டுரையாளர்கள் அனைவருக்கும் நன்றி கூற சொன்னார். மீண்டும் அவரை நான் வணங்கிய தருணம் அது.


மரணத்தின் அழைப்பு!

---------

17/11/17 இல் நான் பணியில் இருந்த ஒரு காலை பொழுதில் இராஜகுமாரன் அவர்களிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. எவ்வித அறிவிப்பும் இன்றி என் வட்டத்தில் உள்ளவர்கள் என்னை அழைக்க மாட்டார்கள் என்பது எழுதாத விதி . அதனை மீறி அவர் அழைத்திருக்கின்றார் என்றால் ஒன்று 'அழைக்கலாமா' என்ற அவரின் குறுஞ்செய்தியை நான் பார்க்கவில்லை அல்லது மிக அவசரமான சூழல் என்று பொருள். 

பணி நேரம் என்பதால் அந்த அழைப்புகள் தவறிய அழைப்புகளாகிப் போயின. இரு முறை அழைப்பு வந்து நின்றது.

என் தனிப்புலனத்தைத் திறந்துப் பார்த்தேன். நினைத்தது போன்றே. " வணக்கம். நலமா?" என்ற முகமன்னுடன் " முக்கியமான தகவல் சொல்ல வேண்டும். எப்போது அழைக்கலாம்?" என்ற கேள்வியும் இருந்தது. 

" மன்னியுங்கள், சார். பணி முடிந்ததும் அழைக்கிறேன் " என்ற பதில் அனுப்பி வைத்தேன். 

அன்று நான்  காலை பணியில்  இருந்ததால் இரண்டு மணிக்கு பணிமுடிந்தபின்பே அவரை அழைத்தேன். தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நூல் நிதி குறித்து திரு. பன்னீர்செல்வம் அவர்கள் பேசியதாகச் சொன்னார். மழைச்சாரல் வெளியிட்ட பத்து நூல்களுக்கும் நிதி கிடைத்திருப்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்தார். எங்கள் உரையாடல் முடிவுறும் தருணத்தில் காலையில் அவர் கனவு கண்டதாகவும்  அதற்கு       விளக்கம் கேட்க வேண்டும் என்றார். 

"என்னிடமா? "சிரித்தேன். 

"கனவு பலன் நல்லா சொல்வீங்களே, இந்தக் கனவுக்குப் பலன் சொல்லுங்க' என்றார் . பின்பு , "இதுவரையில் எங்கப்பா கனவில் வந்ததில்லை. நேற்று வந்தார். ரொம்ப வினோதமான கனவாக இருந்தது" என்றவர், சுருக்கமாக அக்கனவைச் சொன்னார். 

கேட்டதும் மனதில் ஏனோ பதட்டம் ஏற்பட்டது. மௌனமாக இருந்தேன். 

" ஏன் அமைதியாக இருக்கிங்கள்?"

 அவர் அப்படி கேட்டதும் அப்போதைக்கு எனக்குத் திடீரென்று தோன்றியதைச் சொல்லிச் சமாளித்தேன்.

 " நாளை அமாவாசை. அமாவாசையில் இறந்தவர்கள் கனவில் வருவார்கள் என்பார்கள் "  

" அப்படியென்றால் ஏன் இதுவரை வரவில்லை? "

 "அவர்களுக்கு வழிபாடு செய்யச் சொல்லி நினைவுறுத்த வந்திருக்கலாம்" என்றேன்..

" என்கிட்ட போய் வழிபாடு பற்றிப் பேசலாமா? " என்று சிரித்தார்.

அவர் கொள்கை அறிவேன் . நானும் சிரித்தேன். 

" சரி, உங்களுக்கு நேரமாகும், கிளம்புங்கள். அந்தக் கனவுப் பற்றி விரிவாக எழுதி உங்களுக்கு அனுப்புகிறேன்  " என்றார்.

 நான் கிளம்பினேன். வழியெல்லாம் அக்கனவு மனதை உறுத்தியது. அது மரணத்திற்கு விடப்படுகின்ற அழைப்பு போல் உணர்ந்தேன் . 

என்னிடம் அவர் கனவுபலன் கேட்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

மழைச்சாரல் புலனத்திற்காக தொடர்கதை ஒன்றை எழுதினேன். அக்கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் முதலில் இராஜகுமாரன்  அவர்களின்  பார்வைக்கு அனுப்பிய பின்பே குழுவிற்கு பகிர்வேன். என் முதல் வாசகர் அவர் தான். இருபது அத்தியாயம்  வழி அவை தொடர்ந்தன. ஓர் அத்தியாயத்தில்  முழுதும் கனவுகள் சார்ந்து எழுதியிருப்பேன். அந்த அத்தியாயத்தை வாசித்தபோது சிறப்பாக இருப்பதாகக் கருத்துரைத்திருந்தார். அதோடு " உங்களுக்கு கனவு சாஸ்திரம் தெரியுமா? கனவுப் பற்றி நல்லா எழுதியிருக்கிறீர்களே " என்றார். அதன்  தொடர்பில் அவர் இக்கனவை என்னிடம் சொல்ல நினைத்திருக்கலாம்.

நான் வீடு திரும்பும் அவகாசத்தில் அவர்,  அக்கனவை ஒரு கதைப் போன்று எழுதி எனக்கு அனுப்பியிருந்தார்.

°°°°°°°°°

 ஒரு மறையும் கனவு - மறக்கும் கனவு.


இன்று காலை ஐந்து மணிக்கு விழித்து ஆறு மணி வரை டேப்லட்டில் வீடியோ பார்த்து ஆறு மணிக்கு உறங்கியபோது இந்தக் கனவு வந்தது......

எங்கே, எந்த இடம் என்று தெரியவில்லை. 

மறைந்த என் தந்தையின் உடல் பாடம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக அறிந்து அந்த இடத்துக்கு நாங்கள் செல்கிறோம். அந்த நாங்களில் என் அம்மாவும் என் சகோதரர் ஆதியும் இருந்ததாக நிழல்போல் நினைவு.

என் தந்தையார் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றதும் அந்த வீட்டின் அல்லது கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்தில் மேல் மறைப்பு இல்லாத அறையில் வைக்கப்பட்டிருந்த எங்கள் அப்பாவைப்  பார்க்கிறோம். அவர் உடல் வெள்ளைத் துணியால் சுருட்டப்பட்டு ஒரு மேடையில் அல்லது நீள் மேஜையில் வைக்கப்பட்டுள்ளது. முகமும் கால்களும் மட்டுமே தெரிகிறது. தலை அவர் வலப்பக்கம் திரும்பி இருக்கிறது. 

நான் மட்டும் அறையில் நுழைகிறேன். எப்படி இறங்கிச் சென்றேன் என்று தெரியவில்லை. அவர் இடப்பக்கம் நெருங்கியபோது அவர் முகம் ஏற்கனவே இடப்பக்கம் திரும்பி இருப்பதைக் கவனிக்கிறேன்.

இது எப்படி என்று எண்ணம் ஓடுகிறது.

அவர் தலையும் முகமும் பெரிதாக இருக்கிறது. முகம் எந்த வாட்டமும் இல்லாமல் உறங்குவது போல் உள்ளது. மேலே இருந்து பார்த்தபோது வழக்கம்போல் இருந்த முகம் எப்படி பெரிதானது என்ற யோசனை எனக்குள். அவர் முகம் வலம் இடமாக சில தடவை திரும்பிவிடுவதையும் பார்க்கிறேன். அவரைப் பார்க்க அறைக்குள் வந்தபோதே மனதுள் பயம் இருந்தது. அந்தக் கனவில் எனக்கு இருபது முப்பது வயதிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது். பயத்தோடு அவர் உடலருகே இன்னும் நெருங்குகிறேன். அவரது இரு கரங்களும் சட்டென்று வலுவாகப் பற்றி என்னை இழுக்கின்றன. அவர் கைகள் வழக்கத்தைவிடப் பருமனாக இருக்கின்றன. நான் திமிறி விடுபடுகிறேன். அடுத்து நான் மேலே என்னோடு வந்தவர்களுடன் நிற்கிறேன். எப்படி வந்தேன் என்று தெரியவில்லை.

கீழே பார்க்கும்போது மேடையில் அப்பாவைக் காணவில்லை. இதன்பிறகு கனவு சரியாக நினைவில்லை. அப்பா உடலைக் காணவில்லை என்று நாங்கள் சிலரிடம் புகார் செய்ய மீண்டும் அங்கு வைக்கப்படும் என்று சொல்வதாக நினைவு. அதன்பிறகு தெளிவில்லாத சம்பவங்களுடன் கனவு மறைய நான் தூங்கிவிட்டேன்.

அண்மையில் நான் பினாங்கு சென்றபோது என் அப்பா காவலாளியாக வேலை செய்த பள்ளிக்குள் சென்று பார்த்தேன். என் அப்பா வேலைசெய்தபோது1968 இல் சென்று தங்கிய பிறகு அவர் மறைந்த பிறகு சில தடவை பள்ளி வெளியே இருந்து பார்த்திருக்கிறேன். சரியாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்குள் அலுவலகக்கூடம் வரை இப்போது சென்றேன். ஒரு மலாய்க்கார அம்மையார் கவலாளியாக இருக்கிறார். பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக அவர் சொன்னார்.

இளம் வயதில் பெரிய கட்டிடமாகத் தோன்றியது இப்போது கொஞ்சம் சிறியதாகத் தோன்றியது. அலுவலகப் பகுதியில் அதிக மாற்றம் இல்லை. மாடிக்கு நாங்கள் ( நானும் ஆதியும் ) சென்ற நினைவில்லை. 

அந்தப் பள்ளி நினைவில் இன்று இந்தக் கனவு வந்ததா?. அல்லது சில நாட்களுக்கு முன் கைப்பேசியில் உள்ள படங்களைப் புரட்டியபோது நானும் அப்பாவும் -என் பதின்ம வயதில்- (பதினெட்டு வயதாக இருக்கலாம்) வேறு இருவருடன் அருகருகே நிற்கும் படத்தைப் பார்த்தேன். அந்த நினைவில் இந்தக் கனவா?  அண்மையில் நடந்த மலேசிய பாரதி மன்ற கூட்டத்தில் சான்றோராக கவிஞர் வீரமான் உரையாற்றினார். அவர் பினாங்கில் வளர்ந்தவர், என் அப்பாவுடன் பழகியவர் என்பது அன்றுதான் எனக்குத் தெரிய வர அவரோடும் திரு அசன்கனி அவர்களோடும் என் அப்பா பற்றி பேசி அறிந்தேன். அந்த நினைவுகளா இந்தக் கனவு. தெரியவில்லை.

சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அவரைக் கனவில் காண்கிறேன். இருபது ஆண்டுக்கு முன்பு வந்த அந்தக் கனவில் என் அப்பா நடந்து செல்கிறார். நான் அப்பா... அப்பா என்று அவரை அழைக்கிறேன். அவர் திரும்பிப் பார்க்காமல், திரும்பிப் பார்க்க விரும்பாமல் செல்கிறார். நான் எவ்வளவோ கெஞ்சியும் அழுதும் மன்னிப்பு கேட்டும் அவர் திரும்பவே இல்லை. அதன்பிறகு என் கனவில் வரவே இல்லை.

அப்பா மீது எனக்கு அன்பும் மதிப்பும் மிக அதிகம். அவரை நினைக்கும்போது இப்போதும் மனம் நெகிழ்கிறது. அவர் தமிழகத்தில் 1975இல் மறைந்தபோது நானும் ஆதியும் மலேசியாவில் இருந்தோம். என் சகோதரி வீட்டில் அவர் குடும்பத்தார், ஆதி அருகில் இருக்க நான் மட்டும் கதறி அழுதேன். இப்போதும் என் கண்கள் கலங்குகின்றன.

என் அப்பா மாபெரும் மகத்தான மனிதர். தலைவர். அறிஞர். தந்தை பெரியார் பற்றாளர். எங்கள் இருவரையும் பகுத்தறிவு வழிப்படுத்தியவர். எங்களுக்காக பாடுகள் பட்டவர். எங்கள் படிப்பும் அறிவும் அவர் தந்தது.

எங்களிடம் இருந்து பலன்கள் அனுபவிக்காதவர்.  எனக்கு ஏழெட்டு வயதாக இருந்தபோது எங்களைத் தமிழகத்தில் விட்டு விட்டு அவர் மலையகம் புறப்பட இருந்தபோது ஒரு நாள் ஒரு தெரு முனையில் அவரைக் கட்டிக் கொண்டு அந்தப் புரியாத வயதில் போகாதீர்கள் அப்பா என்று அழுதேன். அவர் என்னைத் தூக்கி ஏதோ ஆறுதல் சொன்னார்.

என் தந்தை அன்பு மிக்கவர். இரக்க மனம் உள்ளவர். ஆனால் மிக்க கடுமையான கோபக்காரர். ஏன் எதற்கு என்று தெரியாமல் அவருக்கு கோபம் வந்து விடும். என்னை மிக மோசமான வார்த்தைகளில் வறுத்தெடுத்து விடுவார். சிறு வயதில் அவர் வார்த்தைகள் என்னைத் தைக்காது. அப்போது நான் மிக சாந்த சொரூபி. அமைதியானவன். கோபமே வராது. ஆனால் வளர வளர எனக்கும் கோபம் வந்தது. அவரை ஒரு தடவை எதிர்த்து நின்றேன். 

அதன்பிறகு நாங்கள் பார்த்துக்கொள்ளவோ பேசிக் கொள்ளவோ இல்லை.

இப்போதுகூட, கனவில் கூட அவரோடு பேச முடியவில்லை!

-ஆதி. இராஜகுமாரன் (17.11.2017)

°°°°°°°°°°°

இந்தக் கனவிற்கு பிறகு சில மாதங்களில் அவரின் உடல் நிலையில் பாதிப்பு நிகழ்ந்தது. அன்றைய நாளை (13.2.2018) என்னால் மறக்க இயலாது. பணி முடிந்து வீடு திரும்பிருந்த மாலை நேரம் அது. இராஜகுமாரன் அவர்களிடமிருந்து திடீர் அழைப்பு  வந்தது. அழைப்பை ஏற்றுப் பேசினேன். 

“வணங்கங்க, வீடு திரும்பிட்டீங்களா?” 

“வணக்கம் சார். வீட்டில் தான் இருக்கிறேன்"

“சாப்பீட்டிங்களா? ஓய்வாக இருக்கிறீர்களா?” என்றார் , குரல் பிசகி.

“ஏன் சார் , குரல் வேறு மாதிரி இருக்கிறது. உடம்பிற்கு என்ன?" நான் பதட்டத்துடன் வினாவினேன்.

“ஓ.. குரலில் வித்தியாசம் தெரிகிறதா? எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. மயக்கம் வந்து கீழே விழுந்திருக்கிறேன்.எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று தெரியவில்லை. தாரா வந்து பார்த்து , கத்தியப் பின் தான் கண் விழித்தேன். இப்போது நான் என்ன செய்யணும். இதுக்கு என்ன முதல் உதவி”  என்றார்.

எனக்கு திக் கென்றது. முதல் உதவி என்பதெல்லாம் மறந்து போனது. 

“முதலில் குளிர்ந்த நீர் பகிருங்கள். அருகில் யார் இருக்கிறார்கள்? தாரா இருந்தால் அவரிடம் போனை கொடுங்கள்” என்றேன். 

தாரா கலக்கத்தோடு  “அக்கா’ என்றார். அவரிடமும் குடிக்க நீர் தரச் சொன்னேன். அப்பாவிற்கு  அடி பட்டுள்ளதா,  சிறுநீர் ஏதும்  கழித்துள்ளாரா என்று  வினாவினேன்.

 “அடிப்பட்டது போல் தெரியவில்லை அக்கா. சிறுநீர் கழித்துள்ளார். ஆனால் அவரால் எழ முடியவில்லை” என்றார்.

‘தாமதம் செய்யாமல் ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்யுங்கள். மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்” என்றேன்.

அதனை கேட்டது அவர் உடனே போனை வாங்கி,  “எனக்கு ஒன்றும் இல்லை. நீர் அருந்தியப் பின் நல்ல இருக்கிறது. என்னா, எழுந்திரிக்க முடியவில்லை. நண்பருக்கு தகவல் சொல்லி கிளினிக் போகிறேன்” என்றார்.

“ வேண்டாங்க  சார். நீங்கள் மருத்துவமனைக்குப் போவது தான் சரி. அவசியம் போங்கள்”  என்றேன். அவர் வழக்கமாக முரண்படுவது போன்றே அன்றும் முரண் பட்டார். 

பின்பு தாராவிடம் அண்டை வீட்டாரின் உதவியுடன் அவரைத் தூக்கிக்  கட்டிலில் அமர வைக்க சொன்னேன். அவரின் உடலில்  என்ன நேர்ந்திருக்கிறது என்று அறிய மருத்துவமனை போவது தான் நல்லது என்று வழியுறுத்தினேன்.

மாலையில் கிளினிக் சென்று வந்தும் என்னை அழைத்து , இனிப்பின் அளவு அதிகமாக உள்ளதால் மயக்கம் வந்துள்ளது என்றார். அவரின் உடலின் உணமையான  பாதிப்புநிலை உணராமல். 

“ஏதற்கும் ஒருமுறை மருத்துவமனைக்குச் செல்லுங்கள்” என்று வேண்டினேன். “பார்க்கலாம்” என்றார்.  

அன்று இரவு எழு மணி போல் மீண்டும் அப்படி நிகழ,  தாரா அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்.  மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்தார். அதன் பின் தொடர்ச்சியாக உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்தது. ஆனாலும் அவர் அனைத்தையும்  திடத்துடன் ஏற்றதும் உற்சாகமாக இருந்ததும்  பெரும் வியப்பு.


இறுதி உரையாடல்

--------

இராஜகுமாரன் அவர்கள் மறைவதற்கு ஒரு வாரம் இருக்கையில், 18.8.2018  தேதியன்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அதுவே இறுதிச் சந்திப்பு .  நான் சென்றிருந்தபோது ஒரு குழந்தையைப் போன்று சுருண்டுப் படுத்திருந்தார். அவர் எழும் வரை அமைதியாகக் காத்திருந்தேன். அரைமணி நேரத்திற்கு பின் தாதியர் ஒருவர் வந்து அவரை எழுப்ப கண் விழித்தார். என்னைக் கண்டது முகத்தை மலர்த்தி ‘வாங்க’  என்றார். 

நோயின் தளர்ச்சி விழிகளில் கொஞ்சமும் இல்லை.

 என்  நலத்தை  விசாரித்தார். தலைநகரில் பயற்சியில் இருந்த என் மகளின் தாதிமை பயற்சி அன்றோடு முடிவதை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். 

“இன்றே  மகளை அழைத்துப் போய் விடுவீர்களா?”  .

 “ ஆமாங்க சார் , மாலையில் புறப்பட்டுவிடுவோம்”

அன்று தான் அவர் எதிரில் அமர்ந்து நேராக அவர் முகம் பார்த்து நீண்ட நேரம் உரையாடினேன்.  மழைச்சாரல் குழுவில் தோன்றும் குழப்பங்களையும் எனக்கு ஏற்படும் இலக்கிய நெருக்கடிகளையும் அலைப்பேசியிலேயே  பேசி   பகிர்ந்துள்ளேன். அச்சமயங்களில் எல்லாம் அனைத்தையும் அமைதியாக கேட்பார். அவசியம் என்றால் ஆறுதல் மொழிகளைச் சொல்வார்.  பின்னர் நிதானமாக அதற்கான தீர்வை வழங்குவார்.

 அன்றும் மழைச்சாரல் குழுவைப் பற்றி விசாரித்தார். ‘சமீபத்தில் என்ன கதை எழுதினீர்கள்’  எனக் கேட்டார். 

 சில கவிதைகளை வாசித்துக் காட்ட சொன்னார். இடையிடையே அருந்த பால், நீர் கேட்டார்.  சாப்பிட பழங்களை உரித்து கொடுக்கச் சொல்லி 'இப்படி யாராவது இலக்கியம் பேசிக்கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டே கொஞ்சம் சாப்பிடலாம்' என்றார். 

அன்றைய மணித்துளிகளில் வழக்கம் போலவே படபடப்பாகப் பேசும் பாவத்துடன் நானும் என் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டும் பின் நிதானமாக பதிலுரைத்துக் கொண்டிருந்த அவரும் கொஞ்சமும் உணரவில்லை, அதுவே  எங்களுக்கிடையிலான இறுதி உரையாடல் என்று.  

அன்று நானும் மகளும் விடை பெற்றபோது இரவாகியிருந்தது.   பேருந்திற்கு நேரம் ஆகி விட்டதால்  நாங்கள் அவசர அவசரமாக அவரிடமிருந்து விடை பெற்றோம். புன்னகையுடன்  விடை பெற முடியவில்லை. 

பயற்சி இல்லாத நாட்களில் இராஜகுமாரன் அவர்களைக் காண  என் மகள் செல்வார். அவரைக் காண செல்லும் போதெல்லாம் “என்னை பார்க்கப் புன்னகையோடு அல்லது ஒரு ரோஜாப்பூவோடு வாருங்கள். கவலையோடும் கண்ணீரோடும் வராதீர்கள்’ என்பாராம்.

இறுதி வரையில் தன்னை சுற்றி உள்ளவர்கள் அவருக்காக துயரப் படக்கூடாது என்றே எண்ணியிருந்தார். அதன் பொருட்டு தான்  அவரின் அன்பிற்குப் பாத்திரமான பலரை அவர் சந்திப்பதை தவிர்த்தார் என்பது நானறிந்த உண்மை. தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் தீர்மானித்ததை போன்றே தனது  நோய்யுற்ற இறுதிக் காலத்தை எப்படி முடிப்பது என்பதையும் அவரே முடிவு செய்திருந்தார். அதன் படியே அனைத்து நடந்ததாக உணர்கிறேன்.

என் மகளுடன் ஆதி இராஜகுமாரன்


            முற்றும்        

               ***










ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஆதி இராஜகுமாரன் (2)

 


 (2)

மழைச்சாரலில் இராஜகுமாரன்.

------

மழைச்சாரலில் இலக்கியப் புலனக்குழுவில் இணைந்த காலங்களில்  அவர் உற்சாகமாக வலம் வந்தார். குழுவில் இருந்தவர்கள் பெரும்பாலும் அவருக்கு  அறிமுகமான எழுத்தாளார்களும் அவரால் எழுத்துலகிற்கு அறிமுகமான எழுத்தாளர்களும் இருந்தது அவருக்கு உற்சாகத்தை தந்திருந்தது. 

மழைச்சாரல் நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஆலோசகராகவும் இருந்தார். ஒவ்வொரு முயற்சியையும் நான் அவரிடமே முதலில் சொல்லி ஆலோசனை கேட்பேன். செய்யலாமே என்பார். முடிந்த வரையில் ஒத்துழைப்பு தருவார். சமயங்களில் ஒரு சில விடயங்கள் மட்டும் எனக்கு  முரணாக இருக்கும். அப்போதெல்லாம் அவருடன் வாதம் புரிய நேரிட்டுள்ளது. 

எது எப்படியிருப்பினும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இராஜகுமாரன் அவர்கள் என் திட்டங்களைத் தடுத்ததில்லை. “ நல்ல முயற்சி இது. செய்யுங்கள். முடிந்த வரை தேவையான உதவிகளைச் செய்கிறேன்”  என்பார்.

மழைச்சாரல் மூன்று மொழியில் கவிதைத் தொகுப்பைத் தயாரிக்கும் இறுதிக் கட்ட முயற்சியில் பெரிய சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது.   பத்து நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்  அச்சுறுத்தலை எதிர்கொண்டேன். ‘ கவலை இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டை மட்டும் கவனியுங்கள்’ எனச் சொல்லி அந்த இடர்களைக்  கடக்க பெரும் பங்காற்றியுள்ளார்.  அதனை எந்தச் சூழலிலும் நன்றியோடு நினைத்திருப்பேன்.





கதை, கவிதை நாவல் துறையில் சிறந்த பார்வைக் கொண்டவரான இராஜகுமாரன் அவர்களை  நல்ல வாசகராகவும் நான் அறிந்துள்ளேன். மழைச்சாரலில் பகிரப்படுகின்ற ஒவ்வொரு இலக்கியப் பதிவுகளையும் பகிர்வுகளையும் ஆர்வத்தோடு வாசிப்பார். அது குறித்த அவரின் பார்வையை என் தனிப் புலனத்தில் அனுப்பி வைப்பார். சமயங்களில் அதில் எதிர்வாதமும் இருக்கும் . 

அது சார்ந்த நூல்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார். அதன் தொடர்பிலான நூல்கள் அவரிடமிருந்தால்  தேடி எடுத்து மீண்டும்  வாசிப்பார். வாசித்து முடித்ததும் மறவாமல் கருத்துரைப்பார். எல்லோரின்  மதிப்பேட்டில் உயர்ந்திருக்கும் இராஜகுமாரன் அவர்கள்,  தேடித் தேடி வாசித்ததும் தான் வாசித்ததை என்னுடன்  பகிர்ந்துக் கொள்வதைப்  பெருமையாகவே  கருதினேன்.



‘ அம்மா வந்தாள் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். திரு தி.ஜானகிராமனின் சிறந்த நாவல், அவர் படைப்புகளில். அவர் இன்று எழுதி இப்போது படித்தது போன்ற நிறைவு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. அலங்காரம் அம்மாளின் அன்புக்குரிய சிவசு பற்றி நான் சொன்னது தவறு. மறந்து சொல்லிவிட்டேன். அவன் எல்லா நிறைகளும் நிறைந்தவனே. இந்த நாவலில் எல்லோரும் நல்லவர்களே! எல்லோரும் கஷ்டங்களுக்குள் சிக்கியவர்கள். இந்துவின் படைப்பும் அழகாக உள்ளது. நாவலில் சில விஷயங்களைச் சூசகமாகச் சொல்கிறார் திரு ஜானகிராமன். படித்து முடித்து யோசிக்கையில்தான் புரிகிறது. என் மனம் உணர்வுப் பெருக்கில் திணறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாவலைப் படித்த சுவை ஆறும் முன் எழுதி மனம் ஆற நீங்கள் இருப்பது கொடுப்பினை!

பெரும் விருந்துண்ட மயக்கத்தில் இப்போது நான். 

-ஆதி இராஜகுமாரன் 11/10/2017 


என் படைப்புகளையும்   விமர்சிப்பதுண்டு . "நிகழ்ச்சி ஏற்படுகளை எல்லாம் விட்டுவிடுங்கள் , உங்கள் எழுத்தை மட்டும் கவனியுங்கள். உங்களுக்கான அடையாளம் அது தான்" என்பார் . 

அதற்காக எழுதவும் செய்தேன். நான் எழுதிக் கொண்டிருந்த  தொடரை வாரம் வாரம் வாசித்து கருத்துரைப்பார். தவறுகளைச் சுட்டவும் செய்வார். என்னிடம் உரையாடும் ஒவ்வொரு முறையும் வழக்கமான நலவிசாரிப்புகளுக்கு பின் அவர் கேட்கும் முதல் கேள்வி ‘என்ன வாசித்தீர்கள் இன்று? ’  என்பது தான். என் இலக்கிய நகர்வுகளுக்கு அவரின் வாழ்த்துகள் உற்சாகத்தை அளித்தது. பெரும் பலத்தைத்   தந்துள்ளது.


 " நீங்கள் ஒரு பிறவி எழுத்தாளர். அழகான சிக்கல்களோடு (knots) கதை நகர்கிறது. ஆண் மனதைத் துல்லிதமாக சித்தரிக்கிறீர்கள். எளிமையான கதையை எவ்வளவு ஆழமாக இலகுவான சொற்களால் உங்களால் சொல்ல முடிகிறது என்பது ஆச்சரியம் தருகிறது. 

இந்தத் தொடர்கதையின் உருவாக்கத்தில் நிழல்போல நானும் தொடர்ந்து வருகிறேன். இந்த வாரத்தில் வேதாவின் வரவு இதற்கு முன் நீங்கள் சிந்தித்ததில்லை என்று இதனால் எனக்குத் தெரியும். ஆயினும் வேதாவைச் சம்பந்தப்படுத்தி முடித்திருக்கிறீர்கள் என்பது ஆச்சரியம்தான். நீங்கள் ஆழமாகவும் அகலமாகவும் யோசிப்பதை இது காட்டுகிறது. பாராட்டுகள்.அடுத்தடுத்த வாரப் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்..... 

– 1/11/17 ஆதி இராஜகுமாரன்’

அவர் பொதுவெளியில் அதிகம் வெளிப்பட விரும்பாதவர். இலக்கியம் சார்ந்து மலேசியா பாரதி மன்றத்திலும் மழைச்சாரல் புலனக்குழுவிலும் இருந்தார். நிகழ்ச்சிகளில் ஆர்வமாகக் கலந்து மகிழ்ந்தார். மழைச்சாரல் அனைவரிடமும் அன்பாகவே பழகினார்.




மழைச்சாரல்  வெளியீடான 'மனத்தோடு மழைச்சாரல் '  என்ற தொகுப்பில் இடம் பெற்றிருந்த அவரது கவிதை.


'எதுவாகவோ நான்'

==============


நான் 

யாரென்று

இன்னும் 

எனக்குத்

தெரியவில்லை

எங்கோ

எதுவாகவோ

நான்

எங்கேயும் 

தொடங்காமல்

எங்கே

முடிவேன்

அடையாளங்கள்

இல்லாத

பெருவாழ்வு

வேண்டும்

நிகழ்காலத்தில்

மட்டுமே 

வாழ வேண்டும்

மறுபடி பிறந்தால்

மண்ணுக்குள்

வாழ்வேன்

விண்ணில் 

எனக்கு

இடமில்லை.

எத்தனை முறை 

விழுந்தாலும்

எழுந்தாலும்

மண்ணுக்குள்ளும் 

கொஞ்சம்

மனதுக்குள்ளும்

மறுபடியும்

மறுபடியும் வாழ்வேன்!

என் இடமும்

தடமும் அழிந்து

எத்தனையோ கோடி

மானுடர்போல்

நான் இல்லாமல்

போவதே

எனக்குப் பிடித்த

பயணம்.


-ஆதி.இராஜகுமாரன்

   



        **************

சனி, 21 செப்டம்பர், 2024

ஆதி இராஜகுமாரன் (1)


(1)


 இராஜகுமாரன் என்னும் கவிஞன்

---------

மண்ணில் பாயும் வேர்கள் மரக்கிளையில் பூப்பதில்லை

 

 இந்த வரிகள் அதி இராஜகுமாரன் அவர்களின் ஒரு கவிதையின் தொடக்கம். இந்தக் கவிதை வரிகளே அவர் குறித்த தேடலை எனக்கு உருவாக்கித் தந்திருந்தது. அந்தக்

கவிதை வரிகளோடு இப்பதிவினை தொடங்குகிறேன்.

2010 இல் தைப்பிங் நகரில் நடந்த மழையருவி கவியரங்கம் நிகழ்ச்சியில் கோ.முனியாண்டி அவரது  உரையில் முதன் முதலாக இக்கவிதை வரிகளைச் செவிமெடுத்திருந்தேன். கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள் என்றே எண்ணியிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையை கோ.முனியாண்டி அவர்கள் நயனத்தில் தொடராக எழுதியிருந்தார். இந்த வரிகள் தொட்டும்

எழுதியபோது தான் அவை இராஜகுமாரன் அவர்களின் எழுத்து என்பது தெரிய வந்தது.

மிக ஆழமான வரிகள்.

அவ்வரிகளை அவரின் இலக்கியச் செயல்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுவதாய் உணர்கிறேன். இலக்கியத்தில் அவர் பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்தவர். நயனம் இதழியல்ஆசிரியராக தனித்து தனது முத்திரையைப் பதிப்பதற்கு முன் இராஜகுமாரன் என்ற கலைஞன்இலக்கியத்தில் பதித்த தடங்கள் வேறு. இலக்கிய நதியில் நடந்து அதன் தடத்தில் வெள்ளப் பெருக்கை உருவாக்கியவர். அந்த நதியில் பெருகெடுத்த படைப்பாளிகளைத் தாய்மை கனிவுடன் கண்டு

ரசித்தவர்.

வானம்பாடி, தமிழ் மலருக்கு அடுத்து அவரின் களமாக அமைந்தது தமிழ் ஓசையின் ஞாயிறு மலர்.

தொடர்ந்து வானம்பாடியைப் போன்றே ஞாயிறு ஆசிரியராக தமிழ் ஓசையிலும் அவர் செதுக்கிய

சாசனத்தின் வழி மலேசிய இலக்கியத்திற்குப் புதுச் சிந்தினை புரட்சியை மலரச் செய்தவர். நவீன

வித்துக்களை இம்மண்ணில் விதைத்தவர். அந்த எழுத்தில், எழுச்சியில் எழுத வந்தவர்கள் பலர்.

கதை,கவிதை, நாவல், விமர்சனம், அயல் இலக்கியத்தை அறிமுகப்படுத்துதல் என அவரின்

விரல்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. தமிழ் ஓசை பத்திரிகை அலுவலகத்தில் மாதம் ஒரு முறை

வளரும் எழுத்தாளர்களுக்கு சிறுகதை ,புதுக்கவிதை  கலந்துரையாட சந்திப்பு நிகழ்ச்சியை

தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். புது எழுத்தாளர்களைத் தட்டிக் கொடுக்கும் பண்பினையும் இலக்கிய

அக்கரையுடன் ஒரு படைப்பின் பலம் பலவீனங்களைச் [அது யாருடைய படைப்பாக இருந்த

போதிலும்] சுட்டும் துணிச்சலையும் அவர் கொண்டிருந்தார். நல்ல படைப்புகளையும்

படைப்பாளியையும் தயங்காது சாசனம் என்ற பக்கத்தில் அறிமுகப்படுத்தி அவர்களைப் பெருமைப் படுத்தினார்.

இந்நாட்டில் புதுக்கவிதை தீவிரமாக இயங்க தொடங்கிய காலத்தில் அப்போது மிக ஆர்வமாக

எழுதிக்கொண்டிருந்த கவிஞர்களுக்கும் புதியதாக எழுத வந்த கவிஞர்களுக்கும் அது பெரும்

உற்சாகத்தையும் உத்வே கத்தையும் தந்திருந்தது . என் ஈரம் தொகுப்பில் பெரும்பாலான கவிஞர்கள்

இதனை ஆவணப்படுத்தியிருப்பதை அறியலாம்.

 

அவர் எழுதிய சிறுகதைகள் அன்றைய சூழலில் தேங்கியிருந்த சிறுகதை இலக்கியத்திற்கு

புத்துணர்ச்சியை ஊட்டியது. அதன் முகத்தை திருத்தியெழுதியும் இருந்தது . குறிப்பாக தமிழ் ஓசை ஞாயிறு

மலரின் முத்திரைக் கதைகள் சிறுகதை இலக்கியத்திற்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது.

ஒருமுறை அவரின் சிறுகதை தொகுப்பைப் பிரதியெடுத்து எனக்கு தந்திருந்தார். அக்கதைகள் குறித்து

நீண்ட உரையாடல் எங்களுக்குள் நிகழ்ந்தது. அவரின் சிறுகதை ஒன்றை  எழுத்தாளர்  ஜி.

முருகனின் சிறுகதை ஒன்றுடன் ஒப்பிட்டுக் கருத்துரைத்திருந்தேன்.

தொடர்ந்து நீங்கள் சிறுகதைகள் எழுதியிருக்க வேண்டும் என்றபோது,

எனக்கு சிறுகதை எழுத வேண்டும் என்ற கனவெல்லாம் இல்லை. சிறுகதை எழுத வந்ததே இங்கு

எழுதப்படும் கதையின் முறையை பார்த்த எரிச்சலில் தான். இங்கு நடைமுறையில் இருந்த சிறுகதை

இலக்கணத்தை தூக்கி எறிந்துவிட்டே எழுதினேன் “, என்றார்.

ஆதி. இராஜகுமாரனின் இலக்கிய பணி என்ன என்பது அன்றைய அவரின் தீவிர வாசகர்கள்

அறிவார்கள். அவரின் சாசனத்தின் வீச்சை அறிந்தவர்களுக்கு அவரது பணி அளப்பரியது என்பது

நிச்சயம் தெரியும். அதன் மகத்துவத்தை அவரே அறிந்ததில்லை என்றே நினைக்கிறேன். பல

நினைவுகள் அப்போது அவரின் ஞாபகத்தில் இல்லை. அதனை வாசித்து நான் கருத்துரைத்தால் அப்படியா ?

எழுதியிருக்கலாம். இப்போது அவை என் ஞாபகத்தில் இல்லை என்பார் மிக இயல்பாக.

அவரின் இலக்கியப் பணிகளை முழுமையாக ஆய்வு செய்ய இவர் எழுதிய சாசனம் தொடர் ஒன்றே

போதுமானது. ஒவ்வொரு சாசனத்தின் வழி இராஜகுமாரன் அவர்களின் சிந்தனை முதிர்ச்சியும்

பொறுப்புணர்வும் வாசகனை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தது .

ஒரு சாசனத்தில் அகாலமரணம் அடந்த . . இளஞ்சேகரன் என்ற ஓர் இளம் எழுத்தாளரைப் பற்றி

எழுதி, அவர் எழுதி முடிக்காத சிறுகதையைப் பிரசுரித்து அவருக்கு அஞ்சலி செய்திருக்கிறார்.

இன்னொரு சாசனத்தில் இளஞ்செல்வனின் நெருப்புப்பூக்கள்என்ற புதுக்கவிதை தொகுப்பைத்

திறனாய்வு செய்துள்ளார்

புதுக்கவிதை காட்டில் சடசடவென்று மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

முதலில் இளங்கோவனின் விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து’. அடுத்து நண்பர் இளஞ்செல்வனின்

நெருப்புப்பூக்கள்’. முன்னதை அரங்கேற்றம் செய்தேன். பின்னதை திறனாய்வு செய்கிறேன்.

புதுக்கவிதையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அதைப் படித்து முடித்ததும் ஒரு மெல்லிய புன்னகைக்

கீற்று நம்மையறியாமலேயே உண்டாக வேண்டும்.’ என்று தொடங்குகின்றார்.

மரபுகவிதைகளில் எல்லா வரிகளும் சேர்ந்தது தான் கவிதை. புதுக்கவிதைகளிலோ ஒவ்வொரு

சொல்லும் கவிதை ‘ , என்று முடிக்கிறார்.

ஆதி. இராஜகுமாரனுக்குள் எப்போதும் ஒரு கவிஞர் வாழ்ந்துக்கொண்டிருந்தார். தனது வாழ்நாள்

முழுவதும் கவிதைகளை நேசித்தும் அதனை எழுதியும் வந்தவர். நயனம் இதழின் தீவிர வாசகி என்ற

முறையில் புனைபெயரில் அவர் எழுதிய சில கவிதைகளை வாசித்துள்ளேன். மழைச்சாரலில் என்ற புலனக்குழுவில் அவர்

இணைந்த பின் கவிதையின் பால் அவரின் நாட்டம் அதிகரித்தது. அவருக்குள் கவிதை ஊற்று

மீண்டும் பிரவாகமெடுத்தது. புலனத்தில் பகிரும் கவிதைகளை மிக ஆர்வமாக வாசித்து

சிலாகித்துப் பேசுவார். அது குறித்த அவரின் உரையாடல் நீளும். ‘நவீன கவிதைகளில் இருண்மை

அடர்ந்திருக்கிறது. அதனை முதல் வாசிப்பில் தரிக்க முடியவில்லை. மறு வாசிப்பிலும் இப்படியான

உரையாடலிலும் அதன் அழகை கண்டடைய முடிகிறது’ , என்பர்.

பொதுவாக உரையாடலில் முடிவில் சில கவிதை வரிகளுடன் விடை பெறுவார்.கவிதைகள்

தோன்றும் சமையத்தில் எல்லாம் எழுதிக்கொண்டே இருப்பார் . முடிந்தால் இந்தக் கவிதைகள்

முழுவதும் தொகுக்க வேண்டும் என்பார். அவரின் இறுதிக்காலக் கவிதைகளுடன் பயணிக்க

எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாக கருதுகிறேன்.

 

அளந்து பேச

முடிவு கட்டிய

ஒவ்வொரு முறையும்

பற்களைத் தாண்டி

நாக்கு முன் வந்து விடுகிறது

வலி நாக்குக்கு

மட்டுமல்ல

இதயத்துக்கும் தான்!

கண்ணீரையும்

ரத்தத்தையும்

வேறு எப்படி

கொட்டி

ஓவியம் திட்ட

முடியும்!

                                                                                  ******

 

மழையும்
காற்றும்
பூக்களும்
தரமுடியாத
கனிவு
எப்படி, யார்
தந்தது!
*****
 
மெல்ல மழை
பொழிந்து
பூமி காய்ந்தது
வானம் இருண்டு
வெளிச்சம்
திரண்டது
குருவி குஞ்சுகளும்
பல்லி ஓணான்களும்
நாய் பூனைகளும்
ஓட்டம் நின்றன.
------
 
மழை எப்போது கொட்டும்
மௌனம்
எப்போதுகலையும்!
*****
 
நானும்
குழந்தையாகவே
தவழ்கிறேன்
மடி தேடி!
எந்த மடி
இறக்கிவிட்டது
என்னை
எந்த மடி
ஏற்றிக் கொள்ளும்
என்னை!
இருட்டில்
வழி தெரியாது
மிதக்கும்
என்னை எந்த
நட்சத்திரம்
ஏந்திக் கொள்ளும்!
******
 
உண்மை 
என்பது
பொய்யின்
தொடக்கம்
அவசியமில்லா 
உண்மைகள்
அவசியமான
பொய்கள்.
 
****
மனம்
கனத்து
தடுமாறுகிறது
ஒரு பாறையின்
சுமை
சில கணங்களில்
ஒரு கவிதையின்
கனம்
சில விநாடிகளில்
ஒரு சொல்லின்
கனம்
சில அர்த்தங்களில்
உன் கண்ணீர்த்
துளிகளின்
பளுவைத்
தாங்க முடியாமல்
 
தனிமையிலும் எதிலும் பற்றில்லாமலும் அவர் வாழ்ந்திருந்த தருணங்களில் அவருக்கு மிக
நெருக்கமாக இருந்தது கவிதைகளே. குறைந்தது சில வரிகளையாவது அவரின் கவித்துவம்
வெளிப்பட்டு விடும். தனது உணர்வுகளை கவிதைகளில் இறக்கி வைப்பதையே விரும்பினார்.
எனக்கு எப்போதும் கவிதைகள் தான் போங்கள்என்று சலிப்பும் மகிழ்ச்சியுமாக கூறுவார்.
இராஜகுமாரன் அவர்கள் கவிதைகளோடு தான் வாழ்ந்தார் என்பதற்கு இன்னொரு சான்று நோய்
வாய்ப்பட்டிருந்த தருணங்களிலும் அவர் இயற்றிய கவிதைகள்….
 
நான்
தூங்காதபோது
தொடர்ந்த
இரவுகள்
நான்
தூங்கியபோது
விடிந்தன.
-26/05/2018 
 
ஆம்புலன்ஸ்
நினைவில்லாமல் பழகி
அவசரப்பிரிவு
தாண்டி
வார்டில் வசப்பட்டு
பேம்பர்ஸோடு
தூங்கி 
அரை மணி 
ஒரு மணிக்கு
ஒரு தடவை
வலியோடு
சிறுநீர் வந்து எழுப்ப
தூங்கி விழித்து
தூங்கும்போது
நான்கு மணிக்கு 
நர்சுகள் வந்து
எழுப்பி நான்
நாணம் இழக்க
ஏழு மணிக்கு இன்சுலின் போட
இனிதே கழிகிறது பொழுது
அதே நிலையில்.

01/06/2018

 

இராஜகுமாரன் அவர்கள் மருத்துவமனையில் இருந்த சில சமயம் அலைபேசியை பயன் படுத்தாதிருந்தார்

. அவர் நலம் குறித்து  அவரின் மகள் தாராவிடம் விசாரித்து விட்டு, குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இதனை

'சாருக்கு' படித்துக் காட்டுங்கள்என்றேன்.

 

//எங்கள் கானகத்து

தேவவிருதன்

அம்புப் படுக்கையில்

வழியறியாத

இந்த ஆட்டுக்குட்டி

இனி எங்குச் செல்லும்?//

 

அவரின்  தாரா அதனை வாசித்துக் காட்டியதும் உடனே அதற்கான பதிலை தாராவிடம் சொல்லி அதனை

எனக்கு அனுப்பச் சொல்லியிருந்தார். பதில் இப்படி அமைந்திருந்தது.

 

//யுத்தம் முடிந்தது

காப்பற்றப் பட்டுவிட்டேன்!

-தேவவிருதன்//

 

தாரா என்னை அழைத்து அதனைச் வாசித்து காட்டினார் . இப்படி கவிதையுடன் தன்னைப்

பிணைத்துக் கொண்டிருந்தார்.

கவிதையாகவே வாழ்ந்த அவரின் மனம் மரணத்தை எதிர்கொண்ட போது எந்தக் கவிதையில் தமது

கடைசி மூச்சியை நிறுத்திருக்கும்..?

 

-வாணிஜெயம்