வெணதுகினம்

திங்கள், 8 டிசம்பர், 2025

அக்கினி சுகுமாரன்


 'நிலம் மறப்பதில்லை.. மரம் விதைத்த விதைகளை!’

----------


 


ஓர் எளிய சொல்லின் பொருள் அதற்குரிய பொருளில் உருவகப்படுத்தப்பட்டு அதற்குள்ளே அடங்கிவிடுகிறது. எளிய சொல் ஒன்றை ஒளிரச் செய்யும் வல்லமை கவிஞனுக்கு மட்டுமே வாய்க்கிறது.


ஒரு சொல்லைத் தியானம்போல் பாவித்து , ஒரு சொல்லை இருளில் கிழித்தெழும் பொன்னொளியென  ஆராதித்துக் கொண்டாட கவிஞனால் மட்டுமே முடியும். சொல்லின் மாய வித்தை அறிந்த அக்கினியின் விரல்கள் மலேசியப் புதுக்கவிதை  இலக்கியத்தின் கரையுடைத்து   அலைகளைக் கிளர்ந்தெழச்  செய்தன.


மரம் மறந்திருக்கலாம் அது சொறிந்த இலைகளை… 

நிலம்  மறப்பதில்லை மரம் விதைத்த விதைகளை. 

அக்கினியின் கவிதை வீச்சில் எழுந்த அந்தத் தலைமுறையினர் இன்றும் அதனை மறவாது நினைவு  கூருகிறார்கள்.. தமிழகத்தின் வானம்பாடி கவிஞர்களின் எழுச்சி மலேசியாவிலும்  அந்தத் தாகத்தைத் தந்த காலம் அது.


தமிழ் மலர் பத்திரிகையில் அக்கினி பணிபுரிந்த காலகட்டத்தில் வாரம் ஒருமுறை  ‘புதன்மலர்’ என்று ஒரு பக்கம் அன்றைய துணையாசிரியர் ஒருவரால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனையே தங்களது களமாக ஆக்கிக் கொண்டதாகவும்  ஆதி குமணனின்  இலக்கிய விமர்சனமும்  இவரின் கவிதையும் அப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டதாகவும் ‘ஈரம்’ தொகுப்பிற்கு அக்கினி வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

 “அப்போது மலேசியாவில் புதுக்கவிதைக்கென்று இருந்த ஒரு களம்  ‘ புதன் மலர்’ மட்டுமே” என்றும் கூறியிருந்தார்.  

அந்தச் சிறுதுளி பின்னர்  புதுக்கவிதைச்  சூறாவளியை உருவாக்கியது. அக்காலகட்டத்தில் பெரும்பாலான  அக்கினியின் கவிதைகள் வாசர்களிடையே புதுக்கவிதையினபால் ஆவலையும்  அதனை எழுதும்  ஆர்வத்தையும் உருவாக்கியவை.  அவரின் கவிதைகள்  எற்படுத்தியிருந்த தாக்கத்தைப் புதுக்கவிதையின் காதலர்கள் நிச்சயம் அறிவார்கள். புதுக்கவிதையின் வரலாற்றைக் கவிஞர்களின் பேட்டியின் வாயிலாக பதிவாக்கும்  எண்ணத்துடன்  தொகுக்கபட்ட  ‘ஈரம்’ தொகுப்பில்    பலர் இதனைப் பகிர்ந்திருக்கின்றனர்.


சுகுமாரன் என்ற இளைஞன் பத்திரிகைத் துறையில் கால் பதித்துப் பின்னர்  தன்னைக் கவிஞர் அக்கினியென செதுக்கிக் கொண்டது புதுக்கவிதையின் அவதானிப்பிற்காகக் காலம் செய்த  கட்டாயம் என்றே தெரிகிறது. இன்று புதுக்கவிதையின் முன்னோடிகளில் முதன்மையானவராக அக்கினி சரித்திரத்தில்  எழுதப்பட்டிருக்கிறார்.


என்னதான் அவர் பத்திரிகை தொழிலில் பிற வடிவங்களில் எழுதியிருந்தாலும் அதன்வழி புகழை அடைந்திருந்தாலும் அக்கினி என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது கவிதை என்ற சொல் மாத்திரமே. அக்கினி என்ற நாமத்தின் ஒளிப் பிழம்பு கவிதையோடு மட்டுமே அதிகமாக  வெளிச்சமிடப்பட்டு ஒளிர்கிறது.


கவிஞன் என்பவன் அகமொழியாலும் புறமொழியாலும் சமூதாயத்தை ஒட்டியே வாழ்பவன்  என்பதை அக்கினியின் கவிதைகள் நிருபித்துள்ளன. காதல் கவிதையில் கூட அவர் தான் சமூதாயத்தின் எழ்மையை எடுத்துரைக்கிறார். 


 

‘என் சமூதயம் போல்

ஏக்கங்களால்

இளைத்து விட்டேனே

என்றெல்லாம் வருந்தாதே!


எனது விலா எலும்புகளில்

விளக்கத்தைப்

பிறர் பார்க்கலாம்

கேலியால் பூரிக்கலாம்!


கண்ணே

அணு அணுவாய்

வளர்ந்து நிற்கும்

என் ஆன்மாவை

உனையன்றி

வேறு யாருக்குப்புரியும்! .  

               - அக்கினி


மலேசியப் புதுக்கவிதை இலக்கியத்தில் தேவதச்சனாக எழுந்த அக்கினி மேலும் கவிதையுடனேயே  நிலைபெற்றிருந்தால், மலேசியப் புதுக்கவிதை இலக்கியத்தின் பயணத்தை ஒளி வீச்சுடன் செதுக்கியிருக்கலாம். தமிழகக் கவிதைத் தொகுப்பிற்கு இணையாக இங்கும் பல தொகுப்புகளை  உருவாக்கியிருக்கலாம்.


ஒரு கவிஞனை செயலிழக்கச் செய்யும் வாழ்க்கை  யதார்த்தங்கள் அல்லது தொழில் சார்ந்த கட்டாயங்கள்  அவருக்கும் நிகழ்ந்தது கவிதைக்குப் பேரிழப்பே. நிரந்தர ஊடகவியலாளனாக மாறிய அவர்.. அவருக்குள்ளிருந்த  கவிஞனை அடக்கி வைத்துவிட்டார். 


எனினும் அவருள் வாழ்ந்துகொண்டிருந்த கவிஞன்,  உரையாடல்களில் சொற்களாய்  உலாவரத்  தவறியதில்லை.  நல்ல கவிதையை வாசிக்க நேருகையில் அதனைக் கொண்டாடாமல் இருந்ததில்லை. அக்கினி என்ற படைப்பாளிக்குப் பல முகங்கள் இருந்தாலும் கவிஞர் என்ற முகத்தையே பலரும் நெருக்கமாய் உணர்ந்திருந்தார்கள். இன்று கொண்டாடவும் செய்கிறார்கள். அக்கினியும் அதே கவிதா முகத்தையே நேசித்திருப்பார் என்றே  எண்ணுகிறேன்.


 அக்கினியின் ‘கனா மகுடங்கள்’ அன்றைய தமிழ்நாட்டுக் கவிதை தொகுப்பிற்கு இணையாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. ஆயினும் அது அடுத்தடுத்த தலைமுறையின் பார்வைக்கு  எட்டியதா என்பதை நான் அறியேன். அந்தத் தொகுப்பும் அவரின் இன்னப் பிற கவிதைகளும் வாசகப் பரப்பிற்கு அறிமுகமாக  வேண்டும். அப்போதுதான் நம்மோடு  வாழ்ந்ததும் இப்போது  நாம் இழந்ததும் ஒரு சராசரி கவிஞரை அல்ல என்பதை நம்மால் உணர முடியும்.  ‘கனா மகுடங்கள்’ கவிதைகளுடன் அவரின் பிற கவிதைகளையும்  இணைத்து இத்தொகுப்பு வெளிவருவதில் பெருமகிழ்ச்சி.  மலேசியப் புதுக்கவிதை இலக்கியத்தில் அக்கினி என்ற பெயர் கவிதையாகவே ஒளிர அவரின் துணைவியாரின் இம்முயற்சி பெரும் பங்களிக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை. நன்றி.


 


-        வாணிஜெயம்

வியாழன், 31 ஜூலை, 2025

கலையோடு நான்..


 கலையோடு நான்..

------------------


நான் கதைகளோடு வளர்ந்தவள். என் தாயாரின் வயிற்றில் நான்  கருவாக இருக்கையிலேயே கதைக் கேட்க தொடங்கியிருக்கலாம். என் தந்தையார் அற்புதமான கதை சொல்லி. கதை சொல்லும் போது கதையின் போக்கில் பாவங்களை முகத்தில் கூட்டிக் கதை சொல்வார். என் தாயாரின் மடியில் நான் அமர்ந்ததாக எந்த நினைவு இல்லை. ஆனால் தந்தையின் மடியில் அமர்ந்து கதை கேட்ட ஞாபகங்கள் இன்னும் மனதில் பசுமையாக! கதை கேட்கும்போது அதிக கேள்விகள் கேட்பேன், கதை முடிந்தப்பின்னும் நிறையக் கேட்பேன். என் தந்தையாருக்கு அது மிகவும் பிடிக்கும். அதன் தொடர்பில் இன்னொரு கதை சொல்வார்.
அந்தக் கதை சொல்லும்  கலை என்னுடனே வளர்ந்து. கலை இலக்கியத்தில் நான் நல்ல கதை சொல்லியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் காணும் சின்னச் சின்ன நிகழ்வுகள், கேட்கும் விடயங்கள் பிறரிடம் சொல்லும் போது கதையாகவே மாறிவிடுகிறது. இப்படியாக எண்ணற்ற கதைகள் என்னுள்ளே  உரையாடி ,உறவாடி என்னையறியாது என்னுடன் அவை உறைந்து இருக்கின்றன. என் புன்னகை, கண்ணீர் ,  வலி... வேதனை அனைத்தும் எனக்கு கதைகளே...

வாணிஜெயம்


செவ்வாய், 15 அக்டோபர், 2024

சந்திரா சூரியா

 

'எனக்குப் பிடிக்காததை அடுத்தவர்க்கு கொடுப்பது சரியா?'

 

சந்திரா சூரியாவுடன் சிறு உரையாடல்.



தமிழ் ஊடகத்துறைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது வானொலி என்பது மறுக்க முடியாது. இன்றுவரை மலேசிய வானொலி, தமிழ் சமுதாயத்தின் வாழ்வியலுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறது. வாகனத்தில் பயணிக்கும் வாகனமோட்டிகளையும் பயணிகளையும் எந்தச் சூழலிலும் மனதை இதமாய் வருடிக்கொடுத்து ஒலி அலைகளை எழுப்பி மகிழ வைக்கின்றது. பணிமனைகளிலும் இல்லங்களிலும் உணவகங்களிலும் தடையின்றி ஒலிக்கத் தவறுவதில்லை. பலரது நாட்களைத் தொடக்கி வைப்பதே வானொலிதான்.

மலேசிய வானொலி-தொலைக்காட்சி நிலையம் சிங்கப்பூரில் 1946இல் அமைக்கப்பட்டது. மலேசியா (மலாயா) சுதந்திரம் அடைந்த பின் அது இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று சிங்கை வானொலி. மற்றொன்று மலாயா வானொலி. இதுவே பின்னர் மலேசிய வானொலி என மாற்றம் கண்டது. 1963இல் மலேசியாவில் தொலைக்காட்சி அறிமுகமானதும் மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையம் (RTM)  என்ற பெயரில் விளங்கத் தொடங்கியது.


வானொலி ஊடகத்துறை  எல்லாம் நாடுகளைப் போல் மலேசியாவிலும் முக்கியமான சாதனமாக,  இசையும் தகவல்களும் பரப்பும் மையமாக இன்றுவரை இயங்கி வருகிறது. இசையுடன் நின்றுவிடாமல் தகவல்களைப் பரப்புவதோடு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு என அது தனக்குள் பலவேறு அம்சங்களைத் தாங்கியபடி இயங்குகின்றது. படிக்கத் தெரியாதவர்களுக்கும் வாசிக்க அவகாசம் இல்லாதவர்களுக்கும்  பார்வையற்றவர்களுக்கும் இந்தத் தகவல் மையம் பெரிதும் உதவுகின்றது.

மலேசிய வானொலி தமிழ்ப் பிரிவு முதலில் ரங்காயன் மேரா என்று அழைக்கப்பட்டது, தொடர்ந்து வானொலி ஆறு பிறகு ஒலியலை ஆறு எனப் பெயரில் மாற்றங்கள் கண்டன. இன்று அஃது மின்னல் பண்பலையாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.

நமது  வானொலியில் தமிழ்ப் பிரிவில் எல்லோராலும் அதிகம் அறியப்பட்டவர், வானொலியிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஆளுமையாகத் திகழ்பவர் திருமதி சந்திரா சூரியா. வானொலி அறிவிப்பாளராக, நிகழ்ச்சி தயாரிப்பாளராக, வானொலி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக, மேடை நிகழ்ச்சி அறிவிப்பாளராக மற்றும் நாவல் போட்டியின் நடுவர்களில் ஒருவராக என அவரது பணிகள் கலை சார்ந்தும் மொழி சார்ந்தும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட நாள் பணியில் இயங்கி வரும் இவருடன் தற்செயலாக முகநூலில் உரையாட நேர்ந்தது.

முகநூலில் என் இடுகை ஒன்றுக்கு அவர்  லைக் பண்ணினார். அவர் இணைப்பில் உள்ளார் என்பதை அறிந்து அவரது சுவருக்குச் சென்று நன்றி தெரிவித்தேன். மெல்ல எங்கள் உரையாடல் தொடங்கியது.

"வணக்கம் சகோதரி. சின்ன வயதிலிருந்து உங்களது பெயரை வானொலியில் கேட்டு வருகிறேன். உங்களது நீண்டிருக்கும் பயணம் நேயர்கள் மட்டும் அல்ல, இலக்கிய நேசர்களும் அறிவார்கள். எத்தனை ஆண்டுகள் வானொலியில் இருக்கிறீர்கள் ?”

"முழுமையாக 36 ஆண்டுகள். இப்போது நாடகப் பங்களிப்பு மட்டுமே.”

"எத்தனையாவது வயதில் இருந்து? தாங்கள் விரும்பி ஏற்றப் பணியா இது?”

"21 வயதில் தொடங்கியப் பணி. விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட பணி அல்ல. பிறகு நான் அதிகம் நேசித்தப் பணி இது மட்டுமே. விரும்பி ஏற்காத துறையான போதும் பின்பு எனக்கு அதுவே உயிராகிப்போன துறையாக மாறிப்போனது. அறிவிப்பு பணியில் தொடங்கி தயாரிப்பாளராகி, வானொலி, தொலைக்காட்சிக்கு செய்தி வாசிப்பாளராகி, மேடை நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகத் தொடர்ந்தன. என் பணி சார்ந்து நிறைய அனுபவங்கள் கிடைத்தன. மிகவும் பிடித்துப் போன பணி. எல்லா துறைச் சார்ந்தவர்களையும் நேர்முகம் காண்பது, உரையாடல் நிகழ்ச்சி, சிறுகதை வாசித்தல், நாடகம் தாயாரிப்பு என அனைத்தும் நான் மிகவும் இரசித்து செய்தவை!.”

"இலக்கிய ஈடுபாடு எவ்வாறு உங்களிடம் அமைந்தது. உங்கள் சிறுகதைகள், தொடர்கதைகள் வாசித்துள்ளேன். எட்டி நில் எச்சரிக்கிறேன், இமயத்தைக் கடந்து இதயத்தினுள் நுழைந்தவள் என்ற தொடர்கதைகள் மறக்க முடியாதவை. வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்கதைகள் அவை. நீங்கள் எழுதிய நாடகங்களையும் வானொலி சிறுகதைகளையும் விரும்பிக் கேட்டிருக்கிறேன்?”

"அப்படியா? நன்றி. எனது பதினாறு வயதில் சிறுவர்களுக்காக எழுத தொடங்கினேன். பிறகு வானொலிக்கு எழுதினேன். பத்திரிகைக்கு எழுதியதை விட வானொலிக்கு தான் அதிகம்  எழுதியிருக்கிறேன். சிறுகதைகள், நாடகங்கள், சிறப்பு நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் என எழுதிள்யுள்ளேன். என்னுடைய எழுத்து ஈடுப்பாட்டுக்கு எனது மூத்த சகோதரிகள் திருமதி விஜயாள் வேலாயுதம், திருமதி நீலவேணி சுப்பிரமணியம், திருமதி வீ.தீனரட்சகி ஆகியோரைக் காரணங்களாகச் சொல்வேன். இவர்கள் எனக்கு முன்பே பத்திரிகைகளுக்கு நிறைய எழுதியவர்கள். தீனரட்சகி, விஜயாள் வேலாயுதம் இவர்கள் இருவரின் படைப்புகளை  வாசகர்கள் அதிகமாக விரும்பினார்கள்"


திருமதி சந்திரா சூரியா,எழுத்தாளனி விஜயாள் , தாயார், எழுத்தாளனி நீலவேணி மற்றும் எழுத்தாளனி தீனரட்சகி.

"வி.தீனரட்சகி தாங்களின் சகோதரி என அறிவேன். விஜயாள் வேலாயுதம், நீலவேணி சுப்பிரமணியம் அவர்களும்  உங்கள் சகோதரிகளா? எனக்கு இது புதிய தகவல் சகோதரி”

"ஆமாம்.மூத்தவர் விஜயாள் அடுத்து நீலவேணி, தீனரட்சகி. அவர்களுக்கு அடுத்து தான் நான். நீலவேணி இப்போது இல்லை. நல்ல கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். நினைவில் மாத்திரமே வாழ்கிறார்.


  •       வி.தீனரட்சகி
               

"ஆழ்ந்த அனுதாபங்கள். ஓர் இலக்கியக்  குடும்பத்திலிருந்து வந்துள்ளீர்கள். அனைவரும் பிரபலமான எழுத்தாளனிகள். சின்ன வயதில் நிறையக் கதைகள் பேசி வளர்ந்தீர்களா?”

"அப்படி ஒன்றும் நினைவில் இல்லை. எங்கள் அம்மா தான் அதிகம் கதை சொல்வார்.”

மூத்த சகோதரி ( எழுதாளனி  விஜயாள்)

"தங்களின் முதல் படைப்பு நினைவில் உள்ளதா?”

"ஆம். என் முதல் படைப்பே சிறுவர் தொடர். ஆனால் தலைப்பு நினைவில் இல்லை.”

"எண்ணற்ற நாடங்களைத் தந்துள்ளீர்கள். அதில் உங்களைக்  கவர்ந்த நாடகங்கள் எவை? உங்களது நாடங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தது உண்டா?”

"வரவேற்பை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்வதில்லை. இது உண்மை. எனக்குப் பிடித்ததை எனக்குப் பிடித்தவர்களுக்குச் சொன்னேன். சொல்லியும் வருகிறேன். என்னுடைய எல்லாப் படைப்புகளும் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காததை அடுத்தவர்களுக்கு கொடுப்பது சரியா?”

"நல்ல விளக்கம். தனக்கு பிடித்ததை தான் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும் என்று நீங்கள் கூறுவதில் சிலவற்றை உள்வாங்கிக் கொள்கிறேன். ஒன்று சிறப்பானதை படைக்க வேண்டும் என்ற வேட்கை. சிறப்பானதையே பிறருக்கும் தரவேண்டும் என்ற நல் எண்ணம். எண்ணங்கள் நல்லவையாக இருக்கையில் நம்மைச் சுற்றி அனைத்தும் நலமாக தான் நடக்கும். அமையவும் செய்யும்.”

"உண்மை. நல்லதே நடக்க வேண்டும். நமது சமுதாயம் நலமாக இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெண்கள்”

"அண்மையில் அஸ்ட்ரோ வானவில்லும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தது குறித்து? அதன் தொடர்பான உங்களது அனுபவங்களைப் பகிர முடியுமா?”

"இரண்டாவது முறையும் நான் நடுவராகப் பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு ஒருமுறை நாவல் போட்டியில் நடுவர்களில் நானும் ஒருவராக இருந்துள்ளேன். நம் நாட்டு எழுத்தாளர்களின் ஆற்றலையும் திறமையையும் தெரிந்து வியந்து போன அனுபவங்கள் அவை. நான் பெருமை அடந்த அனுபவமும் கூட.”

"நாவல் போட்டியில் தொடர்ந்து நடுவர்களில் ஒருவராய் இருந்ததால், நம் நாட்டில் நாவல் வளர்ச்சி எப்படி உள்ளது?”

"முன்பே சொன்னது தான். போட்டிக்கு வந்திருந்த ஓரிரண்டு நாவல்களைத் தவிர்த்து மற்ற எல்லாமே அருமை என்பேன். இதை வைத்து மட்டும் நாவல் வளர்ச்சியைக் கணித்துவிட முடியாது. பல நாவல்கள் என்னை பெரிதாகக் கவர்ந்திருந்தன.”


"ஒலியினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஊடகத்துறை, மொழியினை எவ்வாறு வளர்க்கின்றன?”

"வானொலி ஏராளமான எழுத்தாளர்களை வளர்த்துள்ளது. வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்டு முறையாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டவர்கள் பலர். ஒலியை எந்த நேரத்திலும் கேட்க முடியும். பார்க்க முடியாதவர்கள் பெரும்பாலும் கேட்பது வானொலியைத் தான். தமிழை அடிப்படையாகக் கொண்ட எல்லா ஊடகங்களும் மொழியை வளர்க்கின்றன. வானொலியும் அவற்றில் ஒன்று.”

"ஒரு படைப்பை வானொலிக்கு அனுப்பும் நேயர் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் யாவை?”

"அது ஒரு நேயர் அனுப்பும் எழுத்து படிவத்தை பொருத்துள்ளது”

"ஆர்வத்துடன் நாடகம் எழுதுபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் அல்லது புதிதாக எழுத நினைப்பவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?”

"ஆர்வத்துடன் எழுத நினைப்பவர்களும் புதிதாக நாடகம் எழுத நினைக்கும் நேயர்களும் ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. வானொலியில் ஒலியேறும் நல்ல நாடகங்களைக் கேளுங்கள். ஒரு சிறிய வட்டத்தை மட்டும் சுற்றி வராமல், வெளியுலகத்தையும் பார்த்து எழுதுவது சிறப்பு. கதைக்கான கரு எங்கேயும் எப்போதும் கிடைக்கலாம். எழுத்தாளர்கள் தான் ஆர்வத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.”

"ஒரு நாடகம் எவ்வாறு எழுத வேண்டும். அதாவது எத்தனை பக்கங்கள், அதில் எத்தனை பாத்திரங்கள் இருக்க வேண்டும் என்பது போன்ற விபரங்களைச் சொல்ல இயலுமா?”

"30 நிமிட நாடகம் 24 பக்கங்களுக்கு குறையாமல் எழுதப்பட வேண்டும். ஐந்து கதாப்பாத்திரங்களுடன், நல்ல தகவல்களைச் சொல்லும் சுவையுடனும் திருப்பங்களுடனும் இருக்க வேண்டும் என்பது மின்னல் பண்பலையின் எதிர்பார்ப்பு.”

"உங்கள் பார்வையில் சிறந்த வானொலி அறிவிப்பாளராக யாரைச் சொல்வீர்கள்?”

"ஈடுசெய்ய முடியாத குரல் வளத்தைக் கொண்டவர் அசன் கனி. பிடித்த அறிவிப்பாளர் வீ.ஆறுமுகம். இளையவர்களில் எஸ்.குமரன்.”

"இதுவரையில்  உங்களது படைப்புகள் ஏதும் நூல் வடிவம் கண்டுள்ளதா?”

"இதுவரை இல்லை வாணி. இனிமேல் வரும்.”

"தொலைக்காட்சிக்கு நீங்கள் எழுதிய நாடகங்கள் பற்றி?”

"தொலைக்காட்சிக்கு நான் 1982இல் எழுதத் தொடங்கினேன். இதுவரையில் தொலைக்காட்சிக்காக 18 நாடகங்களும் 7 தொடர் நாடகங்களும் எழுதியுள்ளேன். அண்மையில் தொலைக்காட்சியில் ஒளியேறிய குருசிவா, அஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்பட்ட இரண்டு வாரத் தொடரான நேற்று இல்லாத மாற்றம் மற்றும் 5 வாரத் தொடரான வாழ்க்கை வாழ்வதற்கே போன்றவை நான் வடித்த நாடகங்களாகும்.”

"உங்கள் கணவர் கலைத்துறையை சேர்ந்தவரா?”


"இல்லை, ஆயினும் கலையை இரசிக்கக் கூடியவர். அவரது பெயர் மார்டின். ஒரு தனியார் நிறுவனத்தில் பொது உறவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.”

மிக இயல்பாக அமைந்தது  என்னுடன் அவர் நடத்திய  உரையாடல். ஊடகத்துறையில் புகழ் பெற்று விளங்கும் இவரது திறமைக்கு சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

1998இல் சிறந்த வானொலி அறிவிப்பாளராகத் தேந்தெடுக்கப்பட்டார் (Academy of Malaysian  musik industry). தொடர்ந்து 1990இல் பி.பி.என். விருது கிடைத்தது. அதே ஆண்டில் சிலாங்கூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்கு, இலக்கியம் சார்ந்து கு.பத்மநாபன் தங்கப் பதக்க விருதைக் கொடுத்து சிறப்பித்தது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் சி.வீ.குப்புசாமி, ஆதிநாகப்பன் தங்க பதக்க விருதுகள் தந்து சந்திராசூரியா அவர்களைச் சிறப்பித்திருந்தது. 2011 இல் GOPIO வின் International Women Enterpreneurs Excellence Award என்ற உயரிய விருதைப் பெற்றுள்ளார். மேலும் இன்மால் நிறுவனம் சாதனைப் பெண்மணி என்ற விருதை அளித்துள்ளது. 2013 ஆம்  ஆண்டின் கலைஞர் இயக்கத்தின் சிறந்த தொலைக்காட்சி எழுத்தாளர் என்ற விருதையும் இவர் வென்றுள்ளார். 

தொடர்ந்து கண்ணதாசன் விருது,பாரதி தாசன் விருது போன்ற இலக்கியம் சார்ந்த விருதுகளுடன்  வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருதை செலாங்கூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்கு அளித்துள்ளது. தொடர்ந்து ABJ Global Award- ஒலிபரப்புத் துறை  சாதனையாளர் விருது,நாடகத்துறை விருது  மலேசிய கலைமன்றம் வழங்கியுள்ளது.ஒலிபரப்பு மற்றும்  எழுத்துத் துறை சாதனையாளர் விருது (தமிழ் ஓசை) போன்று பல  விருதுகளை நீண்ட நெடிய பயணத்தில் பெற்றுள்ளார்.



தமிழுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இவரது பயணம் இன்றும் சிறப்புடன் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

**********************


மேலே நடந்த உரையாடல் 2013 இல் நிகழ்ந்தது. அது தினக்குரலில் வெளிவந்தது. அவ்வுரையாடலில் அவர் இன்னும் நூல் வெளியிடவில்லை என்றுள்ளார். ஆனால் இப்பதிவை இங்கு இணைக்கும் வேளையில் 2019 ஆண்டில் திருமதி சந்திரா சூரியா அவர்கள் 'வாராயோ வெண்ணிலாவே' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். 28 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பான இது அதிகமான எண்ணிக்கையில் பெண் படைப்பாளிகளைக் கொண்டு வெளியிடப்பட்ட முதல் சிறுகதை நூலாகும்.



 கூடுதல் தகவலாக இவர் நிகழ்நிலை (online) வானொலி ஒலிப்பரப்பை நடத்தி வருகிறார்.
வாரத்தில் இரண்டு நாட்கள் , செவ்வாய், வியாழன் இரவு மணி 7.00-9.00 மணிவரை 
அனைத்துலக ஒலிபரப்பு சிறப்பாக ஒலித்துக்கொண்டிருக்கிறதுமலேசியாவில் மட்டுமல்லாது
ஜெர்மனி, Uk, US, Africa, Chennai, Srilangka, Singapore, போன்ற நாடுகளிலிருந்தும் நேயர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்கிறார்கள். இந்த நேயர் விருப்ப நிகழ்ச்சிக்கு நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.



வியாழன், 10 அக்டோபர், 2024

தமிழ்ச் சீலர் மா.செ. மாயதேவன்






 " எனக்கும்  மாயதேவனுக்குமான நட்பு ஒரு நீண்ட சரித்திரம் போன்றது. அதுகுறித்து எழுதவேண்டும் என்றால் ஒரு தொடர் போல் நீண்டு போகும். அன்றைய எழுத்துலகம்  தொடக்கி வைத்த எங்களின் நட்பு  இன்றுவரை நீடித்துள்ளது. அத்துணை அன்பு, அத்துணை பிணைப்பு! எங்களின் அன்பின் நேர்மைதான் இத்துனை தூரம் எங்களை அழைத்து வந்துள்ளது என நினைக்கிறேன். இலக்கியம் தான் எங்களுக்குள் இத்தகையான அன்புப் பிணைப்பை ற்படுத்தி உள்ளது என்பதால் பெருமை கொள்கிறேன். பார்த்துக் கொள்ளாமலேயே கடிதவாயிலாக உரையாடி நாங்கள் சில நூல்கள் வெளியிட்டுள்ளோம். இதனை சாதனையாகக் கருதுகிறோம். ஒருவரையொருவர்  நேரில் காணாமலேயே இவ்வளவும் செய்திருப்பது ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பையும் நம்பிக்கையையும் காட்டுகின்றன. மா.செ.மாயதேவன் ஒரு சாது. பண்பு மிக்கவர். ஒரு வியப்பான விசயம் என்னவெனில் பல ஆண்டுகளாக நட்பு தொடர்ந்த பின்மா.செவை 1964இல் அவரது திருமணத்தன்று முதல் முதலாக நேரில் கண்டேன்"

 -இலக்கியக் குரிசில் மா.இராமையா (தொலைப்பேசி வாயிலாக: 17.08.13 — மாலை 6.45)

 

 

 ---------------------------

      'தமிழ்த் திருமகனார் மா.செ. மாயதேவனார்'



தூய வெண்ணிற ஆடையுடனும் நெற்றியில் சமய சின்னத்துடன் இன்முகத்தோடு வலம் வரும் தமிழ்ச் சீலர் மா.செ.மாயதேவன் அவர்களுக்கு நம் நாட்டில் எந்த அறிமுகமும் தேவையில்லை. மா.செ என்று மரியாதையாக அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் எழுத்தாளரும் தமிழ்த் தொண்டருமான ஐயா மாயதேவன் அவர்களது வாழ்க்கை  தைப்பிங் நகருடன் இரண்டறக் கலந்தது. அவர்களது சமய சேவையும் மன்றச் சேவையும் சமுதாயப் பணிகளும் இலக்கியத்திற்காக கரம் நீட்டும் அரும்பணியும் மதிக்கத்தக்கவை. இலக்கியத்தின் பால் காதல் கொண்டு மலேசிய படைப்பிலக்கியத்தில் மறக்க முடியாதபடி  தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். சமூக சேவையில், தமிழ் தொண்டில் இன்றளவும் சிறந்து விளங்குகிறார். ஆலயங்களில், தமிழ்ச் சங்கங்களில், சமூக மன்றங்களில் பொறுப்பு வகித்து சேவையாற்றி வருகிறார். 1957இல் அவர் உருவாக்கிய திருமுகம் அச்சகம் இன்றுவரை தைப்பிங் நகரில் இயங்கி வருகிறது. வந்தவரை இன்முகத்துடன் உபசரித்து வழியனுப்பும் பண்பாளர். இப்படி அவரின் சேவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் அவரது முதிர்ந்த அகவை (78) என்றும் தடையாக இருந்ததில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது. இளைஞரைப் போன்று நாளும் ஓயாது இயங்குகின்றார். இவரைச் சந்தித்த பொழுதொன்றில் ஆலயக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வந்திருந்தார். அவர் வரும் வரை காத்திருந்து அவர்களுடன் நான் அளவளாவியத் தருணங்கள் மிக மதிப்புடையவை. (08.08.2013 :நண்பகல் 12)  அத்தருணத்தில் தினக்குரல் பத்திரிகைக்காக சிறு நேர்காணலையும் செய்திருந்தேன். அந்த நேர்காணலின் சிறு பகுதி.

 **வணக்கம்  ஐயா!சமூகப் பணியும் இலக்கியப் பணியும் இரண்டறக் கலந்த இந்த நெடுந்தூரப் பயணத்தில்  தாங்கள் வியந்து பார்த்த அல்லது இன்றளவும் உயரத்தில் வைத்து மதிக்கும் மனிதர்?

மா. செ : தமிழவேள் கோ.சாரங்கபாணி. அந்த மகா மனிதரை மறந்து விட முடியாது. அவர்களே எனக்கு உதாரண மனிதர். அவர்கள் சமுதாயத்திற்கு செய்த பணிகள் மகத்தானவை. மலாயா-சிங்கப்பூரில் அவர்கள் அறிமுகப்படுத்திய  தமிழர் திருநாளை, தொடர்ந்து தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வழி தைப்பிங் நகரில் நடத்தி வருகிறேன்.

 


**மலேசியாவில் மா. இராமையா அவர்களைப் போல் மிக முக்கிய ஆளுமை தாங்கள். தங்களுக்கு எவ்வாறு இலக்கியத்தில் வாசிக்கும் பழக்கமும் எழுத்துப் பயிற்சியும்  அமைந்தது?

மா.செ: சிறுவயதில் இருந்தே வாசிப்பில் எனக்கு ஆர்வமிருந்தது. ஏழாம் வகுப்பு வரை கல்வி பயின்றேன். பள்ளிக்காலத்திலிருந்தே தமிழகத்திலிருந்து வந்த வார, மாத வெளியீடுகளைப் படிக்கும் பழக்கம் இருந்தது. படிப்பை முடித்த பின்  நான் போண்டோக் தஞ்சோங்கில் டெலிபோன் ஆப்ரேட்டராக பணி புரிந்தேன். நாள் முழுவதும் அமர்ந்து இருக்கும் சூழல். அப்போது வாசிக்கும் பழக்கம் மேலும் அதிகரித்தது. பினாங்கு மாநிலத்தில் என் நண்பர் நா.கரீம் (கவிஞர்) புத்தகக் கடை வைத்திருந்தார். கன்னல் கவி என்றும் அவரை அழைப்பார்கள். அவர் வாயிலாக நிறைய நூல்களைப் பெற்று வாசித்தேன். அதிக வாசிப்பே எழுதும் திறனை மேலும் வளர்த்தது. அப்படித்தான் எனது எழுத்துலகம் அமைந்தது. தமிழ் முரசு, சங்கமணி, சோலை, இராட்சணி தீபிகை, மலாயா நண்பன், நாகரிகம், ஜனோபகாரி, இந்தியன் மூவி நீயூஸ், நேசன், சேவிகா, மனோகரன், திரைக்கடல் (கையெழுத்துப்படி), திருமுகம் ஆகிய பத்திரிகையில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளேன். இதில் திருமுகம் என்ற இலக்கியத் திங்கள் இதழை 1952 இல் கையெழுத்துப் பிரதியாக நான் தொடங்கினேன். பின்னர் அது அச்சுப் பிரதியாக நாடெங்கும் வலம் வந்தது.

 ** புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை குறித்து? அந்த சர்ச்சையில் அதிகம் ஈடுபட்டவர் நீங்கள் என அறிகிறேன்.

 மா.செ: ஆமாம். அது என் எழுத்துத் திறனை மேலும் வளர்த்தது என்பேன். தமிழ் முரசில் புதுமைப்பித்தன் குறித்த இலக்கியச் சர்ச்சை எழுந்தது. மிகச் சரியாக சொன்னால் 30.09.51இல் வீ..சபாபதி என்பவர்  தமிழ் முரசில் புதுமைப்பித்தனைத் தாக்கி எழுதியிருந்தார். ஒழுக்கமும் அறமும் இலக்கியத்தில் மிக முக்கியம், அவை புதுமைப்பித்தன் எழுத்துகளில் காணப்படவில்லை. எனவே அவரை மேதை எழுத்தாளர் எனச் சொல்ல முடியாது  என்று எழுதியிருந்தார். அக்கட்டுரைக்குப் புதுமைப்பித்தன் மேதை எழுத்தாளர் என்று ஓர் அணியும் புதுமைப்பித்தன் மேதை எழுத்தாளர் அல்ல என்று ஓர் அணியும் வாதிட்டு எழுதினார்கள். புதுமைப்பித்தன் மேதை எழுத்தாளரே என்பதாய் வாதிட்டு நான் எழுதினேன். இந்த விவாதம் ஏழெட்டு மாதங்கள் வரை நீடித்தது.

** அப்படியா..? இதுகுறித்து எப்போதோ படித்த நினைவு. ஆனால் இத்தனை சுவாரசியமான இலக்கியப்பூசல்  என்று தெரியாது. மேலும் சொல்லுங்கள் ஐயா. எப்படி அந்தக் களம் அமைந்தது, பூசல்கள் தொடர்ந்தன..?


மா.செசற்று முன்பு சொன்னதுபோல் வீ. சபாபதி எழுதிய புதுமைப்பித்தனைப் பற்றிய கட்டுரையே இதற்கு முக்கிய காரணியாக அமைந்து விட்டது. அவர் புதுமைப்பித்தனின் எழுத்தில் தோன்றிய அதிருப்தியை எழுதினார். குறிப்பாக புதுமைப்பித்தனின் விபரீத ஆசையை சுட்டிக் காட்டி அஃது ஒழுக்கக் கேடான கதை எனக் குறிப்பிட்டார். அந்த கட்டுரைக்கு  விவாதக்  களம் அமைக்கும் வகையில் தமிழ் முரசின் அப்போதைய துணையாசிரியர் திரு. வை. திருநாவுக்கரசு இக்கட்டுரை விவாதிக்கத்தக்கது எனக் குறிப்பு வெளியிட்டார். அதுவே சர்ச்சைக்கு களம் அமைத்தது. சிங்கை-மலாயா சூழலில் எழுந்த முதல் சர்ச்சையாகும். அதன் வழி புதுமைப்பித்தனின் படைப்புகளை வாசகர்கள் தேடவும் வாசிக்கவும் செய்தார்கள். அவரது படைப்புக் குறித்து ஆதரித்தும் எதிர்த்தும்  பலவிதமான  விமர்சனங்கள் வெளிப்பட்டன.

 ** புதுமைப்பித்தனின் படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளீர்களா ஐயா? அந்தக் களத்தில் உங்கள் கருத்தின் எதிர்வினை  எத்தகைய மனப்போக்குடன் ஏற்றீர்கள்?

மா.செ: அப்போது நான் இளைஞன். எழுத்தில் துடிப்பு இருந்தது. புதுமைப்பித்தன் மேதையா இல்லையா என்ற சர்ச்சையில் ஆதரித்து நான், சுப.நாராயணன், .கரீம் (சிறுகதைப்பித்தன் என்ற பெயரில்) போன்றவர்களும், எதிர்த்து  வீ. சபாபதி, எச்.இப்ராஹிம் மற்றும் இரா.வெங்கடேசு போன்றவர்களும் எழுதினோம். பலரது பெயர்கள் என் நினைவில் இல்லை. அந்தச்  சர்ச்சைகள் நல்ல ஆரோக்கியமான இலக்கிய விவாதமாக அமைந்தன. நான் அப்படித்தான் அதனை உள்வாங்கினேன். யாரும் தனிப்பட்ட முறையில் பகைமை பாராட்டவில்லை. அன்றைய இலக்கியப் புரிதலும் அப்படித்தானிருந்தது. நான் புதுமைப்பித்தனின் தீவிர வாசகன் என்பதால் அவருடைய எல்லா படைப்புகளையும் ஆர்வமாக வாசித்திருந்தேன். அவை இன்றளவும் என் சேமிப்பில் உள்ளன.

** தங்களுடைய நூல்கள் குறித்து?

 

மா.செ: 1952இல் இரத்தானம் என்ற சிறுகதைத் தொகுப்பு மா.இராமையாவுடன் கூட்டுப் படைப்பாக வெளியிட்டு உள்ளேன். நாற்பதுகளுக்கு பிறகு மலாயாவில் வந்த முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமை இதனைச் சாரும். இதில் இன்னொரு சிறப்பு, இதில் இடம் பெற்ற எட்டு கதைகள் நான்கு தலைப்புகளில் வெளிவந்தன. அதாவது ஒரே தலைப்பில் நானும் மா.இராமையாவும் இருவேறு கருவில் கதை எழுதியிருந்தோம். அதுபோலவே நீர்ச்சூழல் என்ற புதினத்தை நாங்கள் இணைந்து படைத்து 1958இல் வெளியிட்டோம். அதன் பின் தனித்து மலாயாவில் தமிழர் நாகரிகமும் கலையும் 1958, இலக்கியத்தில் புதுமைப்பித்தன் (கட்டுரைத் தொகுப்பு) 1961, சபலம் (சிறுகதைகள் கூட்டுப் படைப்பு) 1962, மலேசியாவில் தமிழர்கள் (கட்டுரைகள்) 1968, மாயதேவன் இலக்கியப் பணிகள் (இரா.வீரப்பன் தொகுத்தது) 1969, மன உணர்வுகள் 1972 மற்றும் இராமையாவின் இலக்கியப்பணி-1975 ஆகிய நூல்களைப் படைத்துள்ளேன். மலேசியாவில் தமிழர்கள் என்ற என்னுடைய_நூலை தமிழகத்தைச் சேர்ந்த பதிப்பகம் ஒன்று என் அனுமதி இன்றி பிரசுரித்து வெளியிட்டிருப்பதை நண்பர் ஒருவர் மூலம் அண்மையில் அறிந்தேன். மற்றபடி முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி புதுமைப்பித்தனின் ஆய்வுப் பணிக்கு என்னிடமிருந்து புதுமைப்பித்தன் குறித்த தகவல்களையும் நூல்களையும் பெற்றுச் சென்றது என்னை மகிழ்ச்சிப் படுத்தியது.    

** தமிழுடன் உங்களின் வாழ்க்கை பயணிக்கிறது என்பதில் அக மகிழ்கிறேன். உங்கள் தமிழ்த் தொண்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது என்னைப் பிரமிக்க வைக்கிறது ஐயா. அது குறித்து மேலும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

மா.செ: தமிழ் உணர்வுடன்  வளர்ந்து அதே உணர்வுடன் வாழ்ந்து வருபவன் நான். மணிச்செல்வி என்ற பெண்ணைத்  தமிழ் மணம் புரிந்து கொண்டிருக்கிறேன். 1500 தமிழ்த் திருமணங்களைச் செய்து வைத்துள்ளேன். இதற்காக ஒரு குழு அமைத்து தோட்டப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் தூரம் பாராமல் சென்று நடத்தி வந்துள்ளேன். என் மகன்கள் இருவருக்கும் தமிழ் மணம் புரிந்து வைத்துள்ளேன். என் பிள்ளைகளுக்கு மணிவண்ணன், மணிமாறன், மணிச்செல்வன் மற்றும் கற்பகவல்லி என்ற தமிழ்ப் பெயரையே சூட்டியுள்ளேன். என் அன்பு மகள் கற்பகவல்லி ஒரு மருத்துவர் மட்டும் அல்ல முறையே சங்கீதம் கற்றுத் திருமுறை ஓதுபவர். பல குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் இப்போதும் சூட்டி மகிழ்ந்து வருகிறேன். முன்பெல்லாம் தோட்டப்புறங்களில் கட்டையன், கருப்பன், தொப்பளான், சின்னாயி, பேச்சாயி, குப்பம்மாள்  போன்ற  பெயர்களே நிலைத்திருந்தன. அங்கு பிரட்டுக் களத்தில் மாரியாயி 15, சின்னான் 20 என்று அவர்களின் பெயருக்குப் பின்னால்  இலக்கம் போட்டு அழைப்பார்கள். அது ஏனென்று சிலகாலம் எனக்குப் புரியாதிருந்தது. மாரியாயி 15க்கு முன் 14 மாரியாயிகள் இருந்துள்ளார்கள் என்று பின்பு தெரிய வந்தது. பெயர்களில் மாற்றத்தை அமைக்க முயன்றேன். என் தமிழ்த் தொண்டுகளில் அதுவும் ஒன்றாக இருந்தது.    

** உங்களது இனிய நண்பர் இலக்கியக் குரிசில் மா.இராமையா குறித்து?

 


இலக்கியக் குரிசல் மா.இராமையா

மா.சே : அவர் பழக இனிமையானவர். என் ஒத்த வயதுடையவர். எங்கள் ஆழமான நட்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பக் காலங்களில் பலர் எங்கள் பெயரில் உள்ள மா ஒற்றுமையைக் கண்டு எங்களைச் சகோதரர்களாக நினைத்துள்ளார்கள். தொடர்ந்து எழுதுவதை நான் நிறுத்தி விட்டேன். அவசியம் ஏற்படும் போதுதான் எழுதுவேன். இலக்கியக் குரிசில் மா.இராமையா அப்படியில்லை. தொடர்ந்து எழுதியும் நூல் வெளியிட்டும் வருகிறார். அவரது ஒவ்வொரு நூலையும் முதலில் எனக்கு தான் அனுப்பி வைப்பார்.

 வர் மாத்திரம் அல்ல ரெ.கார்த்திகேசு போன்ற அன்பர்களும் படைப்பாளிகளும் அவர்களது நூலை எனக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரின் பெயரையும் இங்கு நினைவுகூர முடியாததற்கு வருந்துகிறேன். இலக்கியத்திற்காக என்னை நாடி வருபவர்களை நான் என்றும் அரவணைத்துக் கொள்ளத் தவறுவதில்லை. இலக்கியத்தை, மன்ற பணிகளை, தமிழ்த் தொண்டை, சமூக சேவைகளை இன்முகத்துடன் செய்து வரவே இன்னும் விரும்புகிறேன்.

 


அவர் சொன்னது போன்றே அவரின் பிரத்தியேக அறையில் இருந்த நூல்கள் அவற்றுக்குச்  சாட்சியாக இருந்தன.மிக நேர்த்தியாக  அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மிக ஆர்வமாக அவற்றை பார்த்துக் கொண்டிருந்தபோது "எந்த எந்த நூல்கள் இரண்டாக உள்ளனவோ அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்என்றார். அவரின்  நூல் சேகரிப்புகளைத் தொட்டுப் பார்க்க அனுமதித்ததே எனக்குப் பெரிய பேறாகத் தோன்றியது. அங்கிருந்து எதனையும் எடுக்க மனவரவில்லை. ஆயினும் அவரின் கைப்பட சில நூல்களை எனக்கு அளித்தார்.அவற்றுள் அவரின் இரத்ததானம் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று.

--------+++++----------