வெணதுகினம்

வியாழன், 10 அக்டோபர், 2024

தமிழ்ச் சீலர் மா.செ. மாயதேவன்






 " எனக்கும்  மாயதேவனுக்குமான நட்பு ஒரு நீண்ட சரித்திரம் போன்றது. அதுகுறித்து எழுதவேண்டும் என்றால் ஒரு தொடர் போல் நீண்டு போகும். அன்றைய எழுத்துலகம்  தொடக்கி வைத்த எங்களின் நட்பு  இன்றுவரை நீடித்துள்ளது. அத்துணை அன்பு, அத்துணை பிணைப்பு! எங்களின் அன்பின் நேர்மைதான் இத்துனை தூரம் எங்களை அழைத்து வந்துள்ளது என நினைக்கிறேன். இலக்கியம் தான் எங்களுக்குள் இத்தகையான அன்புப் பிணைப்பை ற்படுத்தி உள்ளது என்பதால் பெருமை கொள்கிறேன். பார்த்துக் கொள்ளாமலேயே கடிதவாயிலாக உரையாடி நாங்கள் சில நூல்கள் வெளியிட்டுள்ளோம். இதனை சாதனையாகக் கருதுகிறோம். ஒருவரையொருவர்  நேரில் காணாமலேயே இவ்வளவும் செய்திருப்பது ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பையும் நம்பிக்கையையும் காட்டுகின்றன. மா.செ.மாயதேவன் ஒரு சாது. பண்பு மிக்கவர். ஒரு வியப்பான விசயம் என்னவெனில் பல ஆண்டுகளாக நட்பு தொடர்ந்த பின்மா.செவை 1964இல் அவரது திருமணத்தன்று முதல் முதலாக நேரில் கண்டேன்"

 -இலக்கியக் குரிசில் மா.இராமையா (தொலைப்பேசி வாயிலாக: 17.08.13 — மாலை 6.45)

 

 

 ---------------------------

      'தமிழ்த் திருமகனார் மா.செ. மாயதேவனார்'



தூய வெண்ணிற ஆடையுடனும் நெற்றியில் சமய சின்னத்துடன் இன்முகத்தோடு வலம் வரும் தமிழ்ச் சீலர் மா.செ.மாயதேவன் அவர்களுக்கு நம் நாட்டில் எந்த அறிமுகமும் தேவையில்லை. மா.செ என்று மரியாதையாக அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் எழுத்தாளரும் தமிழ்த் தொண்டருமான ஐயா மாயதேவன் அவர்களது வாழ்க்கை  தைப்பிங் நகருடன் இரண்டறக் கலந்தது. அவர்களது சமய சேவையும் மன்றச் சேவையும் சமுதாயப் பணிகளும் இலக்கியத்திற்காக கரம் நீட்டும் அரும்பணியும் மதிக்கத்தக்கவை. இலக்கியத்தின் பால் காதல் கொண்டு மலேசிய படைப்பிலக்கியத்தில் மறக்க முடியாதபடி  தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். சமூக சேவையில், தமிழ் தொண்டில் இன்றளவும் சிறந்து விளங்குகிறார். ஆலயங்களில், தமிழ்ச் சங்கங்களில், சமூக மன்றங்களில் பொறுப்பு வகித்து சேவையாற்றி வருகிறார். 1957இல் அவர் உருவாக்கிய திருமுகம் அச்சகம் இன்றுவரை தைப்பிங் நகரில் இயங்கி வருகிறது. வந்தவரை இன்முகத்துடன் உபசரித்து வழியனுப்பும் பண்பாளர். இப்படி அவரின் சேவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் அவரது முதிர்ந்த அகவை (78) என்றும் தடையாக இருந்ததில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது. இளைஞரைப் போன்று நாளும் ஓயாது இயங்குகின்றார். இவரைச் சந்தித்த பொழுதொன்றில் ஆலயக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வந்திருந்தார். அவர் வரும் வரை காத்திருந்து அவர்களுடன் நான் அளவளாவியத் தருணங்கள் மிக மதிப்புடையவை. (08.08.2013 :நண்பகல் 12)  அத்தருணத்தில் தினக்குரல் பத்திரிகைக்காக சிறு நேர்காணலையும் செய்திருந்தேன். அந்த நேர்காணலின் சிறு பகுதி.

 **வணக்கம்  ஐயா!சமூகப் பணியும் இலக்கியப் பணியும் இரண்டறக் கலந்த இந்த நெடுந்தூரப் பயணத்தில்  தாங்கள் வியந்து பார்த்த அல்லது இன்றளவும் உயரத்தில் வைத்து மதிக்கும் மனிதர்?

மா. செ : தமிழவேள் கோ.சாரங்கபாணி. அந்த மகா மனிதரை மறந்து விட முடியாது. அவர்களே எனக்கு உதாரண மனிதர். அவர்கள் சமுதாயத்திற்கு செய்த பணிகள் மகத்தானவை. மலாயா-சிங்கப்பூரில் அவர்கள் அறிமுகப்படுத்திய  தமிழர் திருநாளை, தொடர்ந்து தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வழி தைப்பிங் நகரில் நடத்தி வருகிறேன்.

 


**மலேசியாவில் மா. இராமையா அவர்களைப் போல் மிக முக்கிய ஆளுமை தாங்கள். தங்களுக்கு எவ்வாறு இலக்கியத்தில் வாசிக்கும் பழக்கமும் எழுத்துப் பயிற்சியும்  அமைந்தது?

மா.செ: சிறுவயதில் இருந்தே வாசிப்பில் எனக்கு ஆர்வமிருந்தது. ஏழாம் வகுப்பு வரை கல்வி பயின்றேன். பள்ளிக்காலத்திலிருந்தே தமிழகத்திலிருந்து வந்த வார, மாத வெளியீடுகளைப் படிக்கும் பழக்கம் இருந்தது. படிப்பை முடித்த பின்  நான் போண்டோக் தஞ்சோங்கில் டெலிபோன் ஆப்ரேட்டராக பணி புரிந்தேன். நாள் முழுவதும் அமர்ந்து இருக்கும் சூழல். அப்போது வாசிக்கும் பழக்கம் மேலும் அதிகரித்தது. பினாங்கு மாநிலத்தில் என் நண்பர் நா.கரீம் (கவிஞர்) புத்தகக் கடை வைத்திருந்தார். கன்னல் கவி என்றும் அவரை அழைப்பார்கள். அவர் வாயிலாக நிறைய நூல்களைப் பெற்று வாசித்தேன். அதிக வாசிப்பே எழுதும் திறனை மேலும் வளர்த்தது. அப்படித்தான் எனது எழுத்துலகம் அமைந்தது. தமிழ் முரசு, சங்கமணி, சோலை, இராட்சணி தீபிகை, மலாயா நண்பன், நாகரிகம், ஜனோபகாரி, இந்தியன் மூவி நீயூஸ், நேசன், சேவிகா, மனோகரன், திரைக்கடல் (கையெழுத்துப்படி), திருமுகம் ஆகிய பத்திரிகையில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வந்துள்ளேன். இதில் திருமுகம் என்ற இலக்கியத் திங்கள் இதழை 1952 இல் கையெழுத்துப் பிரதியாக நான் தொடங்கினேன். பின்னர் அது அச்சுப் பிரதியாக நாடெங்கும் வலம் வந்தது.

 ** புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை குறித்து? அந்த சர்ச்சையில் அதிகம் ஈடுபட்டவர் நீங்கள் என அறிகிறேன்.

 மா.செ: ஆமாம். அது என் எழுத்துத் திறனை மேலும் வளர்த்தது என்பேன். தமிழ் முரசில் புதுமைப்பித்தன் குறித்த இலக்கியச் சர்ச்சை எழுந்தது. மிகச் சரியாக சொன்னால் 30.09.51இல் வீ..சபாபதி என்பவர்  தமிழ் முரசில் புதுமைப்பித்தனைத் தாக்கி எழுதியிருந்தார். ஒழுக்கமும் அறமும் இலக்கியத்தில் மிக முக்கியம், அவை புதுமைப்பித்தன் எழுத்துகளில் காணப்படவில்லை. எனவே அவரை மேதை எழுத்தாளர் எனச் சொல்ல முடியாது  என்று எழுதியிருந்தார். அக்கட்டுரைக்குப் புதுமைப்பித்தன் மேதை எழுத்தாளர் என்று ஓர் அணியும் புதுமைப்பித்தன் மேதை எழுத்தாளர் அல்ல என்று ஓர் அணியும் வாதிட்டு எழுதினார்கள். புதுமைப்பித்தன் மேதை எழுத்தாளரே என்பதாய் வாதிட்டு நான் எழுதினேன். இந்த விவாதம் ஏழெட்டு மாதங்கள் வரை நீடித்தது.

** அப்படியா..? இதுகுறித்து எப்போதோ படித்த நினைவு. ஆனால் இத்தனை சுவாரசியமான இலக்கியப்பூசல்  என்று தெரியாது. மேலும் சொல்லுங்கள் ஐயா. எப்படி அந்தக் களம் அமைந்தது, பூசல்கள் தொடர்ந்தன..?


மா.செசற்று முன்பு சொன்னதுபோல் வீ. சபாபதி எழுதிய புதுமைப்பித்தனைப் பற்றிய கட்டுரையே இதற்கு முக்கிய காரணியாக அமைந்து விட்டது. அவர் புதுமைப்பித்தனின் எழுத்தில் தோன்றிய அதிருப்தியை எழுதினார். குறிப்பாக புதுமைப்பித்தனின் விபரீத ஆசையை சுட்டிக் காட்டி அஃது ஒழுக்கக் கேடான கதை எனக் குறிப்பிட்டார். அந்த கட்டுரைக்கு  விவாதக்  களம் அமைக்கும் வகையில் தமிழ் முரசின் அப்போதைய துணையாசிரியர் திரு. வை. திருநாவுக்கரசு இக்கட்டுரை விவாதிக்கத்தக்கது எனக் குறிப்பு வெளியிட்டார். அதுவே சர்ச்சைக்கு களம் அமைத்தது. சிங்கை-மலாயா சூழலில் எழுந்த முதல் சர்ச்சையாகும். அதன் வழி புதுமைப்பித்தனின் படைப்புகளை வாசகர்கள் தேடவும் வாசிக்கவும் செய்தார்கள். அவரது படைப்புக் குறித்து ஆதரித்தும் எதிர்த்தும்  பலவிதமான  விமர்சனங்கள் வெளிப்பட்டன.

 ** புதுமைப்பித்தனின் படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளீர்களா ஐயா? அந்தக் களத்தில் உங்கள் கருத்தின் எதிர்வினை  எத்தகைய மனப்போக்குடன் ஏற்றீர்கள்?

மா.செ: அப்போது நான் இளைஞன். எழுத்தில் துடிப்பு இருந்தது. புதுமைப்பித்தன் மேதையா இல்லையா என்ற சர்ச்சையில் ஆதரித்து நான், சுப.நாராயணன், .கரீம் (சிறுகதைப்பித்தன் என்ற பெயரில்) போன்றவர்களும், எதிர்த்து  வீ. சபாபதி, எச்.இப்ராஹிம் மற்றும் இரா.வெங்கடேசு போன்றவர்களும் எழுதினோம். பலரது பெயர்கள் என் நினைவில் இல்லை. அந்தச்  சர்ச்சைகள் நல்ல ஆரோக்கியமான இலக்கிய விவாதமாக அமைந்தன. நான் அப்படித்தான் அதனை உள்வாங்கினேன். யாரும் தனிப்பட்ட முறையில் பகைமை பாராட்டவில்லை. அன்றைய இலக்கியப் புரிதலும் அப்படித்தானிருந்தது. நான் புதுமைப்பித்தனின் தீவிர வாசகன் என்பதால் அவருடைய எல்லா படைப்புகளையும் ஆர்வமாக வாசித்திருந்தேன். அவை இன்றளவும் என் சேமிப்பில் உள்ளன.

** தங்களுடைய நூல்கள் குறித்து?

 

மா.செ: 1952இல் இரத்தானம் என்ற சிறுகதைத் தொகுப்பு மா.இராமையாவுடன் கூட்டுப் படைப்பாக வெளியிட்டு உள்ளேன். நாற்பதுகளுக்கு பிறகு மலாயாவில் வந்த முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமை இதனைச் சாரும். இதில் இன்னொரு சிறப்பு, இதில் இடம் பெற்ற எட்டு கதைகள் நான்கு தலைப்புகளில் வெளிவந்தன. அதாவது ஒரே தலைப்பில் நானும் மா.இராமையாவும் இருவேறு கருவில் கதை எழுதியிருந்தோம். அதுபோலவே நீர்ச்சூழல் என்ற புதினத்தை நாங்கள் இணைந்து படைத்து 1958இல் வெளியிட்டோம். அதன் பின் தனித்து மலாயாவில் தமிழர் நாகரிகமும் கலையும் 1958, இலக்கியத்தில் புதுமைப்பித்தன் (கட்டுரைத் தொகுப்பு) 1961, சபலம் (சிறுகதைகள் கூட்டுப் படைப்பு) 1962, மலேசியாவில் தமிழர்கள் (கட்டுரைகள்) 1968, மாயதேவன் இலக்கியப் பணிகள் (இரா.வீரப்பன் தொகுத்தது) 1969, மன உணர்வுகள் 1972 மற்றும் இராமையாவின் இலக்கியப்பணி-1975 ஆகிய நூல்களைப் படைத்துள்ளேன். மலேசியாவில் தமிழர்கள் என்ற என்னுடைய_நூலை தமிழகத்தைச் சேர்ந்த பதிப்பகம் ஒன்று என் அனுமதி இன்றி பிரசுரித்து வெளியிட்டிருப்பதை நண்பர் ஒருவர் மூலம் அண்மையில் அறிந்தேன். மற்றபடி முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி புதுமைப்பித்தனின் ஆய்வுப் பணிக்கு என்னிடமிருந்து புதுமைப்பித்தன் குறித்த தகவல்களையும் நூல்களையும் பெற்றுச் சென்றது என்னை மகிழ்ச்சிப் படுத்தியது.    

** தமிழுடன் உங்களின் வாழ்க்கை பயணிக்கிறது என்பதில் அக மகிழ்கிறேன். உங்கள் தமிழ்த் தொண்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது என்னைப் பிரமிக்க வைக்கிறது ஐயா. அது குறித்து மேலும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

மா.செ: தமிழ் உணர்வுடன்  வளர்ந்து அதே உணர்வுடன் வாழ்ந்து வருபவன் நான். மணிச்செல்வி என்ற பெண்ணைத்  தமிழ் மணம் புரிந்து கொண்டிருக்கிறேன். 1500 தமிழ்த் திருமணங்களைச் செய்து வைத்துள்ளேன். இதற்காக ஒரு குழு அமைத்து தோட்டப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் தூரம் பாராமல் சென்று நடத்தி வந்துள்ளேன். என் மகன்கள் இருவருக்கும் தமிழ் மணம் புரிந்து வைத்துள்ளேன். என் பிள்ளைகளுக்கு மணிவண்ணன், மணிமாறன், மணிச்செல்வன் மற்றும் கற்பகவல்லி என்ற தமிழ்ப் பெயரையே சூட்டியுள்ளேன். என் அன்பு மகள் கற்பகவல்லி ஒரு மருத்துவர் மட்டும் அல்ல முறையே சங்கீதம் கற்றுத் திருமுறை ஓதுபவர். பல குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் இப்போதும் சூட்டி மகிழ்ந்து வருகிறேன். முன்பெல்லாம் தோட்டப்புறங்களில் கட்டையன், கருப்பன், தொப்பளான், சின்னாயி, பேச்சாயி, குப்பம்மாள்  போன்ற  பெயர்களே நிலைத்திருந்தன. அங்கு பிரட்டுக் களத்தில் மாரியாயி 15, சின்னான் 20 என்று அவர்களின் பெயருக்குப் பின்னால்  இலக்கம் போட்டு அழைப்பார்கள். அது ஏனென்று சிலகாலம் எனக்குப் புரியாதிருந்தது. மாரியாயி 15க்கு முன் 14 மாரியாயிகள் இருந்துள்ளார்கள் என்று பின்பு தெரிய வந்தது. பெயர்களில் மாற்றத்தை அமைக்க முயன்றேன். என் தமிழ்த் தொண்டுகளில் அதுவும் ஒன்றாக இருந்தது.    

** உங்களது இனிய நண்பர் இலக்கியக் குரிசில் மா.இராமையா குறித்து?

 


இலக்கியக் குரிசல் மா.இராமையா

மா.சே : அவர் பழக இனிமையானவர். என் ஒத்த வயதுடையவர். எங்கள் ஆழமான நட்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பக் காலங்களில் பலர் எங்கள் பெயரில் உள்ள மா ஒற்றுமையைக் கண்டு எங்களைச் சகோதரர்களாக நினைத்துள்ளார்கள். தொடர்ந்து எழுதுவதை நான் நிறுத்தி விட்டேன். அவசியம் ஏற்படும் போதுதான் எழுதுவேன். இலக்கியக் குரிசில் மா.இராமையா அப்படியில்லை. தொடர்ந்து எழுதியும் நூல் வெளியிட்டும் வருகிறார். அவரது ஒவ்வொரு நூலையும் முதலில் எனக்கு தான் அனுப்பி வைப்பார்.

 வர் மாத்திரம் அல்ல ரெ.கார்த்திகேசு போன்ற அன்பர்களும் படைப்பாளிகளும் அவர்களது நூலை எனக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரின் பெயரையும் இங்கு நினைவுகூர முடியாததற்கு வருந்துகிறேன். இலக்கியத்திற்காக என்னை நாடி வருபவர்களை நான் என்றும் அரவணைத்துக் கொள்ளத் தவறுவதில்லை. இலக்கியத்தை, மன்ற பணிகளை, தமிழ்த் தொண்டை, சமூக சேவைகளை இன்முகத்துடன் செய்து வரவே இன்னும் விரும்புகிறேன்.

 


அவர் சொன்னது போன்றே அவரின் பிரத்தியேக அறையில் இருந்த நூல்கள் அவற்றுக்குச்  சாட்சியாக இருந்தன.மிக நேர்த்தியாக  அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மிக ஆர்வமாக அவற்றை பார்த்துக் கொண்டிருந்தபோது "எந்த எந்த நூல்கள் இரண்டாக உள்ளனவோ அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்என்றார். அவரின்  நூல் சேகரிப்புகளைத் தொட்டுப் பார்க்க அனுமதித்ததே எனக்குப் பெரிய பேறாகத் தோன்றியது. அங்கிருந்து எதனையும் எடுக்க மனவரவில்லை. ஆயினும் அவரின் கைப்பட சில நூல்களை எனக்கு அளித்தார்.அவற்றுள் அவரின் இரத்ததானம் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று.

--------+++++----------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக