'எனக்குப் பிடிக்காததை அடுத்தவர்க்கு கொடுப்பது சரியா?'
சந்திரா சூரியாவுடன் சிறு உரையாடல்.
தமிழ் ஊடகத்துறைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது வானொலி என்பது மறுக்க முடியாது. இன்றுவரை மலேசிய வானொலி, தமிழ் சமுதாயத்தின் வாழ்வியலுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறது. வாகனத்தில் பயணிக்கும் வாகனமோட்டிகளையும் பயணிகளையும் எந்தச் சூழலிலும் மனதை இதமாய் வருடிக்கொடுத்து ஒலி அலைகளை எழுப்பி மகிழ வைக்கின்றது. பணிமனைகளிலும் இல்லங்களிலும் உணவகங்களிலும் தடையின்றி ஒலிக்கத் தவறுவதில்லை. பலரது நாட்களைத் தொடக்கி வைப்பதே வானொலிதான்.
மலேசிய வானொலி-தொலைக்காட்சி நிலையம் சிங்கப்பூரில் 1946இல் அமைக்கப்பட்டது. மலேசியா (மலாயா) சுதந்திரம் அடைந்த பின் அது இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று சிங்கை வானொலி. மற்றொன்று மலாயா வானொலி. இதுவே பின்னர் மலேசிய வானொலி என மாற்றம் கண்டது. 1963இல் மலேசியாவில் தொலைக்காட்சி அறிமுகமானதும் மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையம் (RTM) என்ற பெயரில் விளங்கத் தொடங்கியது.
வானொலி ஊடகத்துறை எல்லாம் நாடுகளைப் போல் மலேசியாவிலும் முக்கியமான சாதனமாக, இசையும் தகவல்களும் பரப்பும் மையமாக இன்றுவரை இயங்கி வருகிறது. இசையுடன் நின்றுவிடாமல் தகவல்களைப் பரப்புவதோடு மொழி, கலை, இலக்கியம், பண்பாடு என அது தனக்குள் பலவேறு அம்சங்களைத் தாங்கியபடி இயங்குகின்றது. படிக்கத் தெரியாதவர்களுக்கும் வாசிக்க அவகாசம் இல்லாதவர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் இந்தத் தகவல் மையம் பெரிதும் உதவுகின்றது.
மலேசிய வானொலி தமிழ்ப் பிரிவு முதலில் ரங்காயன் மேரா என்று அழைக்கப்பட்டது, தொடர்ந்து வானொலி ஆறு பிறகு ஒலியலை ஆறு எனப் பெயரில் மாற்றங்கள் கண்டன. இன்று அஃது மின்னல் பண்பலையாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது.
நமது வானொலியில் தமிழ்ப் பிரிவில் எல்லோராலும் அதிகம் அறியப்பட்டவர், வானொலியிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஆளுமையாகத் திகழ்பவர் திருமதி சந்திரா சூரியா. வானொலி அறிவிப்பாளராக, நிகழ்ச்சி தயாரிப்பாளராக, வானொலி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக, மேடை நிகழ்ச்சி அறிவிப்பாளராக மற்றும் நாவல் போட்டியின் நடுவர்களில் ஒருவராக என அவரது பணிகள் கலை சார்ந்தும் மொழி சார்ந்தும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட நாள் பணியில் இயங்கி வரும் இவருடன் தற்செயலாக முகநூலில் உரையாட நேர்ந்தது.
முகநூலில் என் இடுகை ஒன்றுக்கு அவர் லைக் பண்ணினார். அவர் இணைப்பில் உள்ளார் என்பதை அறிந்து அவரது சுவருக்குச் சென்று நன்றி தெரிவித்தேன். மெல்ல எங்கள் உரையாடல் தொடங்கியது.
"வணக்கம் சகோதரி. சின்ன வயதிலிருந்து உங்களது பெயரை வானொலியில் கேட்டு வருகிறேன். உங்களது நீண்டிருக்கும் பயணம் நேயர்கள் மட்டும் அல்ல, இலக்கிய நேசர்களும் அறிவார்கள். எத்தனை ஆண்டுகள் வானொலியில் இருக்கிறீர்கள் ?”
"முழுமையாக 36 ஆண்டுகள். இப்போது நாடகப் பங்களிப்பு மட்டுமே.”
"எத்தனையாவது வயதில் இருந்து? தாங்கள் விரும்பி ஏற்றப் பணியா இது?”
"21 வயதில் தொடங்கியப் பணி. விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட பணி அல்ல. பிறகு நான் அதிகம் நேசித்தப் பணி இது மட்டுமே. விரும்பி ஏற்காத துறையான போதும் பின்பு எனக்கு அதுவே உயிராகிப்போன துறையாக மாறிப்போனது. அறிவிப்பு பணியில் தொடங்கி தயாரிப்பாளராகி, வானொலி, தொலைக்காட்சிக்கு செய்தி வாசிப்பாளராகி, மேடை நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகத் தொடர்ந்தன. என் பணி சார்ந்து நிறைய அனுபவங்கள் கிடைத்தன. மிகவும் பிடித்துப் போன பணி. எல்லா துறைச் சார்ந்தவர்களையும் நேர்முகம் காண்பது, உரையாடல் நிகழ்ச்சி, சிறுகதை வாசித்தல், நாடகம் தாயாரிப்பு என அனைத்தும் நான் மிகவும் இரசித்து செய்தவை!.”
"இலக்கிய ஈடுபாடு எவ்வாறு உங்களிடம் அமைந்தது. உங்கள் சிறுகதைகள், தொடர்கதைகள் வாசித்துள்ளேன். எட்டி நில் எச்சரிக்கிறேன், இமயத்தைக் கடந்து இதயத்தினுள் நுழைந்தவள் என்ற தொடர்கதைகள் மறக்க முடியாதவை. வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்கதைகள் அவை. நீங்கள் எழுதிய நாடகங்களையும் வானொலி சிறுகதைகளையும் விரும்பிக் கேட்டிருக்கிறேன்?”
"அப்படியா? நன்றி. எனது பதினாறு வயதில் சிறுவர்களுக்காக எழுத தொடங்கினேன். பிறகு வானொலிக்கு எழுதினேன். பத்திரிகைக்கு எழுதியதை விட வானொலிக்கு தான் அதிகம் எழுதியிருக்கிறேன். சிறுகதைகள், நாடகங்கள், சிறப்பு நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் என எழுதிள்யுள்ளேன். என்னுடைய எழுத்து ஈடுப்பாட்டுக்கு எனது மூத்த சகோதரிகள் திருமதி விஜயாள் வேலாயுதம், திருமதி நீலவேணி சுப்பிரமணியம், திருமதி வீ.தீனரட்சகி ஆகியோரைக் காரணங்களாகச் சொல்வேன். இவர்கள் எனக்கு முன்பே பத்திரிகைகளுக்கு நிறைய எழுதியவர்கள். தீனரட்சகி, விஜயாள் வேலாயுதம் இவர்கள் இருவரின் படைப்புகளை வாசகர்கள் அதிகமாக விரும்பினார்கள்"
![]() |
| திருமதி சந்திரா சூரியா,எழுத்தாளனி விஜயாள் , தாயார், எழுத்தாளனி நீலவேணி மற்றும் எழுத்தாளனி தீனரட்சகி. |
"வி.தீனரட்சகி தாங்களின் சகோதரி என அறிவேன். விஜயாள் வேலாயுதம், நீலவேணி சுப்பிரமணியம் அவர்களும் உங்கள் சகோதரிகளா? எனக்கு இது புதிய தகவல் சகோதரி”
"ஆமாம்.மூத்தவர் விஜயாள் அடுத்து நீலவேணி, தீனரட்சகி. அவர்களுக்கு அடுத்து தான் நான். நீலவேணி இப்போது இல்லை. நல்ல கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். நினைவில் மாத்திரமே வாழ்கிறார்.
"அப்படி ஒன்றும் நினைவில் இல்லை. எங்கள் அம்மா தான் அதிகம் கதை சொல்வார்.”
![]() |
| மூத்த சகோதரி ( எழுதாளனி விஜயாள்) |
"தங்களின் முதல் படைப்பு நினைவில் உள்ளதா?”
"ஆம். என் முதல் படைப்பே சிறுவர் தொடர். ஆனால் தலைப்பு நினைவில் இல்லை.”
"எண்ணற்ற நாடங்களைத் தந்துள்ளீர்கள். அதில் உங்களைக் கவர்ந்த நாடகங்கள் எவை? உங்களது நாடங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தது உண்டா?”
"வரவேற்பை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்வதில்லை. இது உண்மை. எனக்குப் பிடித்ததை எனக்குப் பிடித்தவர்களுக்குச் சொன்னேன். சொல்லியும் வருகிறேன். என்னுடைய எல்லாப் படைப்புகளும் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காததை அடுத்தவர்களுக்கு கொடுப்பது சரியா?”
"நல்ல விளக்கம். தனக்கு பிடித்ததை தான் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும் என்று நீங்கள் கூறுவதில் சிலவற்றை உள்வாங்கிக் கொள்கிறேன். ஒன்று சிறப்பானதை படைக்க வேண்டும் என்ற வேட்கை. சிறப்பானதையே பிறருக்கும் தரவேண்டும் என்ற நல் எண்ணம். எண்ணங்கள் நல்லவையாக இருக்கையில் நம்மைச் சுற்றி அனைத்தும் நலமாக தான் நடக்கும். அமையவும் செய்யும்.”
"உண்மை. நல்லதே நடக்க வேண்டும். நமது சமுதாயம் நலமாக இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெண்கள்”
"அண்மையில் அஸ்ட்ரோ வானவில்லும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தது குறித்து? அதன் தொடர்பான உங்களது அனுபவங்களைப் பகிர முடியுமா?”
"இரண்டாவது முறையும் நான் நடுவராகப் பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு ஒருமுறை நாவல் போட்டியில் நடுவர்களில் நானும் ஒருவராக இருந்துள்ளேன். நம் நாட்டு எழுத்தாளர்களின் ஆற்றலையும் திறமையையும் தெரிந்து வியந்து போன அனுபவங்கள் அவை. நான் பெருமை அடந்த அனுபவமும் கூட.”
"நாவல் போட்டியில் தொடர்ந்து நடுவர்களில் ஒருவராய் இருந்ததால், நம் நாட்டில் நாவல் வளர்ச்சி எப்படி உள்ளது?”
"முன்பே சொன்னது தான். போட்டிக்கு வந்திருந்த ஓரிரண்டு நாவல்களைத் தவிர்த்து மற்ற எல்லாமே அருமை என்பேன். இதை வைத்து மட்டும் நாவல் வளர்ச்சியைக் கணித்துவிட முடியாது. பல நாவல்கள் என்னை பெரிதாகக் கவர்ந்திருந்தன.”
"ஒலியினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்கும் ஊடகத்துறை, மொழியினை எவ்வாறு வளர்க்கின்றன?”
"வானொலி ஏராளமான எழுத்தாளர்களை வளர்த்துள்ளது. வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளைக் கேட்டு முறையாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டவர்கள் பலர். ஒலியை எந்த நேரத்திலும் கேட்க முடியும். பார்க்க முடியாதவர்கள் பெரும்பாலும் கேட்பது வானொலியைத் தான். தமிழை அடிப்படையாகக் கொண்ட எல்லா ஊடகங்களும் மொழியை வளர்க்கின்றன. வானொலியும் அவற்றில் ஒன்று.”
"ஒரு படைப்பை வானொலிக்கு அனுப்பும் நேயர் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் யாவை?”
"அது ஒரு நேயர் அனுப்பும் எழுத்து படிவத்தை பொருத்துள்ளது”
"ஆர்வத்துடன் நாடகம் எழுதுபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் அல்லது புதிதாக எழுத நினைப்பவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?”
"ஆர்வத்துடன் எழுத நினைப்பவர்களும் புதிதாக நாடகம் எழுத நினைக்கும் நேயர்களும் ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. வானொலியில் ஒலியேறும் நல்ல நாடகங்களைக் கேளுங்கள். ஒரு சிறிய வட்டத்தை மட்டும் சுற்றி வராமல், வெளியுலகத்தையும் பார்த்து எழுதுவது சிறப்பு. கதைக்கான கரு எங்கேயும் எப்போதும் கிடைக்கலாம். எழுத்தாளர்கள் தான் ஆர்வத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.”
"ஒரு நாடகம் எவ்வாறு எழுத வேண்டும். அதாவது எத்தனை பக்கங்கள், அதில் எத்தனை பாத்திரங்கள் இருக்க வேண்டும் என்பது போன்ற விபரங்களைச் சொல்ல இயலுமா?”
"30 நிமிட நாடகம் 24 பக்கங்களுக்கு குறையாமல் எழுதப்பட வேண்டும். ஐந்து கதாப்பாத்திரங்களுடன், நல்ல தகவல்களைச் சொல்லும் சுவையுடனும் திருப்பங்களுடனும் இருக்க வேண்டும் என்பது மின்னல் பண்பலையின் எதிர்பார்ப்பு.”
"உங்கள் பார்வையில் சிறந்த வானொலி அறிவிப்பாளராக யாரைச் சொல்வீர்கள்?”
"ஈடுசெய்ய முடியாத குரல் வளத்தைக் கொண்டவர் அசன் கனி. பிடித்த அறிவிப்பாளர் வீ.ஆறுமுகம். இளையவர்களில் எஸ்.குமரன்.”
"இதுவரையில் உங்களது படைப்புகள் ஏதும் நூல் வடிவம் கண்டுள்ளதா?”
"இதுவரை இல்லை வாணி. இனிமேல் வரும்.”
"தொலைக்காட்சிக்கு நீங்கள் எழுதிய நாடகங்கள் பற்றி?”
"தொலைக்காட்சிக்கு நான் 1982இல் எழுதத் தொடங்கினேன். இதுவரையில் தொலைக்காட்சிக்காக 18 நாடகங்களும் 7 தொடர் நாடகங்களும் எழுதியுள்ளேன். அண்மையில் தொலைக்காட்சியில் ஒளியேறிய குருசிவா, அஸ்ட்ரோவில் ஒளிபரப்பப்பட்ட இரண்டு வாரத் தொடரான நேற்று இல்லாத மாற்றம் மற்றும் 5 வாரத் தொடரான வாழ்க்கை வாழ்வதற்கே போன்றவை நான் வடித்த நாடகங்களாகும்.”
"உங்கள் கணவர் கலைத்துறையை சேர்ந்தவரா?”
"இல்லை, ஆயினும் கலையை இரசிக்கக் கூடியவர். அவரது பெயர் மார்டின். ஒரு தனியார் நிறுவனத்தில் பொது உறவுத்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.”
மிக இயல்பாக அமைந்தது என்னுடன் அவர் நடத்திய உரையாடல். ஊடகத்துறையில் புகழ் பெற்று விளங்கும் இவரது திறமைக்கு சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
1998இல் சிறந்த வானொலி அறிவிப்பாளராகத் தேந்தெடுக்கப்பட்டார் (Academy of Malaysian musik industry). தொடர்ந்து 1990இல் பி.பி.என். விருது கிடைத்தது. அதே ஆண்டில் சிலாங்கூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்கு, இலக்கியம் சார்ந்து கு.பத்மநாபன் தங்கப் பதக்க விருதைக் கொடுத்து சிறப்பித்தது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் சி.வீ.குப்புசாமி, ஆதிநாகப்பன் தங்க பதக்க விருதுகள் தந்து சந்திராசூரியா அவர்களைச் சிறப்பித்திருந்தது. 2011 இல் GOPIO வின் International Women Enterpreneurs Excellence Award என்ற உயரிய விருதைப் பெற்றுள்ளார். மேலும் இன்மால் நிறுவனம் சாதனைப் பெண்மணி என்ற விருதை அளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் கலைஞர் இயக்கத்தின் சிறந்த தொலைக்காட்சி எழுத்தாளர் என்ற விருதையும் இவர் வென்றுள்ளார்.
தொடர்ந்து கண்ணதாசன் விருது,பாரதி தாசன் விருது போன்ற இலக்கியம் சார்ந்த விருதுகளுடன் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருதை செலாங்கூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்கு அளித்துள்ளது. தொடர்ந்து ABJ Global Award- ஒலிபரப்புத் துறை சாதனையாளர் விருது,நாடகத்துறை விருது மலேசிய கலைமன்றம் வழங்கியுள்ளது.ஒலிபரப்பு மற்றும் எழுத்துத் துறை சாதனையாளர் விருது (தமிழ் ஓசை) போன்று பல விருதுகளை நீண்ட நெடிய பயணத்தில் பெற்றுள்ளார்.
தமிழுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இவரது பயணம் இன்றும் சிறப்புடன் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
**********************




















