(2)
மழைச்சாரலில் இராஜகுமாரன்.
------
மழைச்சாரலில் இலக்கியப் புலனக்குழுவில் இணைந்த காலங்களில் அவர் உற்சாகமாக வலம் வந்தார். குழுவில் இருந்தவர்கள் பெரும்பாலும் அவருக்கு அறிமுகமான எழுத்தாளார்களும் அவரால் எழுத்துலகிற்கு அறிமுகமான எழுத்தாளர்களும் இருந்தது அவருக்கு உற்சாகத்தை தந்திருந்தது.
மழைச்சாரல் நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஆலோசகராகவும் இருந்தார். ஒவ்வொரு முயற்சியையும் நான் அவரிடமே முதலில் சொல்லி ஆலோசனை கேட்பேன். செய்யலாமே என்பார். முடிந்த வரையில் ஒத்துழைப்பு தருவார். சமயங்களில் ஒரு சில விடயங்கள் மட்டும் எனக்கு முரணாக இருக்கும். அப்போதெல்லாம் அவருடன் வாதம் புரிய நேரிட்டுள்ளது.
எது எப்படியிருப்பினும் எந்தச் சந்தர்ப்பத்திலும் இராஜகுமாரன் அவர்கள் என் திட்டங்களைத் தடுத்ததில்லை. “ நல்ல முயற்சி இது. செய்யுங்கள். முடிந்த வரை தேவையான உதவிகளைச் செய்கிறேன்” என்பார்.
மழைச்சாரல் மூன்று மொழியில் கவிதைத் தொகுப்பைத் தயாரிக்கும் இறுதிக் கட்ட முயற்சியில் பெரிய சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது. பத்து நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அச்சுறுத்தலை எதிர்கொண்டேன். ‘ கவலை இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டை மட்டும் கவனியுங்கள்’ எனச் சொல்லி அந்த இடர்களைக் கடக்க பெரும் பங்காற்றியுள்ளார். அதனை எந்தச் சூழலிலும் நன்றியோடு நினைத்திருப்பேன்.
கதை, கவிதை நாவல் துறையில் சிறந்த பார்வைக் கொண்டவரான இராஜகுமாரன் அவர்களை நல்ல வாசகராகவும் நான் அறிந்துள்ளேன். மழைச்சாரலில் பகிரப்படுகின்ற ஒவ்வொரு இலக்கியப் பதிவுகளையும் பகிர்வுகளையும் ஆர்வத்தோடு வாசிப்பார். அது குறித்த அவரின் பார்வையை என் தனிப் புலனத்தில் அனுப்பி வைப்பார். சமயங்களில் அதில் எதிர்வாதமும் இருக்கும் .
அது சார்ந்த நூல்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார். அதன் தொடர்பிலான நூல்கள் அவரிடமிருந்தால் தேடி எடுத்து மீண்டும் வாசிப்பார். வாசித்து முடித்ததும் மறவாமல் கருத்துரைப்பார். எல்லோரின் மதிப்பேட்டில் உயர்ந்திருக்கும் இராஜகுமாரன் அவர்கள், தேடித் தேடி வாசித்ததும் தான் வாசித்ததை என்னுடன் பகிர்ந்துக் கொள்வதைப் பெருமையாகவே கருதினேன்.
‘ அம்மா வந்தாள் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். திரு தி.ஜானகிராமனின் சிறந்த நாவல், அவர் படைப்புகளில். அவர் இன்று எழுதி இப்போது படித்தது போன்ற நிறைவு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. அலங்காரம் அம்மாளின் அன்புக்குரிய சிவசு பற்றி நான் சொன்னது தவறு. மறந்து சொல்லிவிட்டேன். அவன் எல்லா நிறைகளும் நிறைந்தவனே. இந்த நாவலில் எல்லோரும் நல்லவர்களே! எல்லோரும் கஷ்டங்களுக்குள் சிக்கியவர்கள். இந்துவின் படைப்பும் அழகாக உள்ளது. நாவலில் சில விஷயங்களைச் சூசகமாகச் சொல்கிறார் திரு ஜானகிராமன். படித்து முடித்து யோசிக்கையில்தான் புரிகிறது. என் மனம் உணர்வுப் பெருக்கில் திணறுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாவலைப் படித்த சுவை ஆறும் முன் எழுதி மனம் ஆற நீங்கள் இருப்பது கொடுப்பினை!
பெரும் விருந்துண்ட மயக்கத்தில் இப்போது நான்.
-ஆதி இராஜகுமாரன் 11/10/2017
என் படைப்புகளையும் விமர்சிப்பதுண்டு . "நிகழ்ச்சி ஏற்படுகளை எல்லாம் விட்டுவிடுங்கள் , உங்கள் எழுத்தை மட்டும் கவனியுங்கள். உங்களுக்கான அடையாளம் அது தான்" என்பார் .
அதற்காக எழுதவும் செய்தேன். நான் எழுதிக் கொண்டிருந்த தொடரை வாரம் வாரம் வாசித்து கருத்துரைப்பார். தவறுகளைச் சுட்டவும் செய்வார். என்னிடம் உரையாடும் ஒவ்வொரு முறையும் வழக்கமான நலவிசாரிப்புகளுக்கு பின் அவர் கேட்கும் முதல் கேள்வி ‘என்ன வாசித்தீர்கள் இன்று? ’ என்பது தான். என் இலக்கிய நகர்வுகளுக்கு அவரின் வாழ்த்துகள் உற்சாகத்தை அளித்தது. பெரும் பலத்தைத் தந்துள்ளது.
" நீங்கள் ஒரு பிறவி எழுத்தாளர். அழகான சிக்கல்களோடு (knots) கதை நகர்கிறது. ஆண் மனதைத் துல்லிதமாக சித்தரிக்கிறீர்கள். எளிமையான கதையை எவ்வளவு ஆழமாக இலகுவான சொற்களால் உங்களால் சொல்ல முடிகிறது என்பது ஆச்சரியம் தருகிறது.
இந்தத் தொடர்கதையின் உருவாக்கத்தில் நிழல்போல நானும் தொடர்ந்து வருகிறேன். இந்த வாரத்தில் வேதாவின் வரவு இதற்கு முன் நீங்கள் சிந்தித்ததில்லை என்று இதனால் எனக்குத் தெரியும். ஆயினும் வேதாவைச் சம்பந்தப்படுத்தி முடித்திருக்கிறீர்கள் என்பது ஆச்சரியம்தான். நீங்கள் ஆழமாகவும் அகலமாகவும் யோசிப்பதை இது காட்டுகிறது. பாராட்டுகள்.அடுத்தடுத்த வாரப் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்.....
– 1/11/17 ஆதி இராஜகுமாரன்’
அவர் பொதுவெளியில் அதிகம் வெளிப்பட விரும்பாதவர். இலக்கியம் சார்ந்து மலேசியா பாரதி மன்றத்திலும் மழைச்சாரல் புலனக்குழுவிலும் இருந்தார். நிகழ்ச்சிகளில் ஆர்வமாகக் கலந்து மகிழ்ந்தார். மழைச்சாரல் அனைவரிடமும் அன்பாகவே பழகினார்.
மழைச்சாரல் வெளியீடான 'மனத்தோடு மழைச்சாரல் ' என்ற தொகுப்பில் இடம் பெற்றிருந்த அவரது கவிதை.
'எதுவாகவோ நான்'
==============
நான்
யாரென்று
இன்னும்
எனக்குத்
தெரியவில்லை
எங்கோ
எதுவாகவோ
நான்
எங்கேயும்
தொடங்காமல்
எங்கே
முடிவேன்
அடையாளங்கள்
இல்லாத
பெருவாழ்வு
வேண்டும்
நிகழ்காலத்தில்
மட்டுமே
வாழ வேண்டும்
மறுபடி பிறந்தால்
மண்ணுக்குள்
வாழ்வேன்
விண்ணில்
எனக்கு
இடமில்லை.
எத்தனை முறை
விழுந்தாலும்
எழுந்தாலும்
மண்ணுக்குள்ளும்
கொஞ்சம்
மனதுக்குள்ளும்
மறுபடியும்
மறுபடியும் வாழ்வேன்!
என் இடமும்
தடமும் அழிந்து
எத்தனையோ கோடி
மானுடர்போல்
நான் இல்லாமல்
போவதே
எனக்குப் பிடித்த
பயணம்.
-ஆதி.இராஜகுமாரன்








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக