ஞானரதம்
------
2012 இல் 'மழையும் உலர்ந்திடாத ஈரமும்' புதுக்கவிதை வரலாறு சார்ந்த நேர்காணல் தொடரை வாசித்து வந்த கோ.முனியாண்டி அவர்கள் என்னை அழைத்து "இராஜகுமாரனையும் இத்தொடரில் நேர்காணல் செய்யுங்கள்" என்றார். எனக்குள் இந்த எண்ணம் ஏற்கனவே இருந்தது. தயக்கம் காரணமாக செயலில் இறங்கவில்லை. கோமு அவர்களின் ஆலோசனையையும் அவ்விதமே தயக்கத்தினால் ஆறப்போட்டிருந்தேன்.
அவ்வருடம் இராஜகுமாரன் அவர்களின் பிறந்த நாளின் போது (28/7/2014) "இன்று இராஜகுமாரன் அவர்களுக்குப் பிறந்தநாள். வாழ்த்து தெரிவிக்கவும்’ என்ற குறுஞ்செய்தி கோமு சாரிடமிருந்து வந்திருந்தது.
என் வாழ்த்தை இராஜகுமாரன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். மறுநொடியில் அவரிடமிருந்து நன்றி என்று பதில் வந்தது. இராஜகுமாரன் அவர்களிடமிருந்து வந்திருந்த அச்சிறிய குறுஞ்செய்தி என்னை மகிழ்ச்சியடைய வைத்தது . மறு குருஞ்செய்தி அனுப்பி பேச அனுமதி கேட்டேன். அவரிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அழைத்து என் எண்ணத்தை தயக்கத்துடன் கூறினேன்.
“ தினக்குரலில் உங்கள் தொடர் நேர்காணலை வாசித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது. ஆனால் என்னிடமிருந்து எந்தப் பதிவையும் எதிர்பார்க்காதீர்கள்" என்றார்.
அவரின் மறுப்பை மறுக்கும் வகையில் நான் ஏதோ சொன்னேன். அவர் மீண்டும் மறுத்தார். நான் பதிலேதும் பேசாது அமைதியானேன்.
என் மௌனத்தை புரிந்து கொண்டு , “வருத்தப்படாதீர்கள், ஒருநாள் என்னைப் பற்றி நீங்கள் எழுதுவீர்கள். நிச்சயம் எழுதுவீர்கள் என்று நான் நம்புகின்றேன். அது என் காலத்திற்குப் பிறகாக அமைந்திருக்கும்” என்றார்.
“ சார், நீங்கள் மறுத்ததில் கூட எனக்கு வருத்தம் இல்லை. இப்படி பிறந்தநாள் அதுவும் இறப்பைப் பற்றிப் பேசுவது வருந்த வைக்கிறது ” என்றேன்.
“ இதில் வருந்த ஏதும் இல்லை” என்று அவர் உரையாடலை முடித்தார்.
அந்த உரையாடலை நான் மறந்தே விட்டேன். ஆனால் இராஜகுமாரன் அவர்கள் அதனை நினைவில் வைத்திருந்து ஓர் உரையாடலில் ஞாபகப்படுத்திப் பேசினார்.
“அன்று உங்களை வருந்த வைத்து விட்டேன் என்று வருத்தப்பட்டேன் . அப்படி பேசியிருக்க கூடாதோ என்றும் நினைத்தேன். நல்ல விதமாக மறுத்திருக்கலாம்” என்றார்.
எதிராளியின் மனதை நினைத்து பார்ப்பது அவரின் அன்பு மனதின் இயல்பு என்பதை பின்னர் சில சம்பவங்களில் உணர்ந்திருக்கிறேன்.
முதல் உரையாடலில் அவர் உதிர்த்த சொற்கள் நிதர்சனமாகியிருக்கிறது. சில சொற்கள் பிரபஞ்சத்தின் வெளியில் தங்கி விடுகின்றது. அங்கேயே காத்திருக்கின்றன. காத்திருந்து மீண்டும் நம்மை வந்தடைந்து செயல் படவைக்கின்றன.
அதுவே அவர் குறித்து நான் தொகுத்த நூலுக்கும் நேர்ந்தது. அப்படியொரு நூல் முயற்சியைக் குழுவில் யாரும் முடிவு செய்யவில்லை. அவரைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்த மட்டுமே முடிவெடுத்தோம். அதனை அறிந்து அவர் தடுத்து விட்டார். குழுவில் ஆதி இராஜகுமாரன் உருவாக்கிய எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர் மீது பெரும் மதிப்பும் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் ஒத்துழைக்க முன் வந்ததை போன்றே இராஜகுமாரன் அவர்களின் மனம் வருந்தும் வகையில் அவரை மீறி அவருக்கான நிகழ்ச்சி செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
நான் அதனை ஏற்றுக்கொண்டாலும் அவர் குறித்து எழுத்திலாவது கொண்டுவர நினைத்தேன். அவர்களின் புதல்வி நயனதாராவை அழைத்து உதவி நாடினேன்.
"அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காது, அக்கா. ஆனால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது செய்யாவிட்டால் பின் எப்போது செய்வது? யார் செய்வது? " என்றார். தேவையான உதவிகள் செய்வதாகவும் சொன்னார். அது போன்றே அந்த நூலில் இடம்பெற்ற புகைப்படங்களையெல்லாம் தேடிக் கொடுத்தார்.முகப்புப் படத்திற்காக புகைப்படம் ஒன்றையும் புதிதாகப் பிடித்துக் கொடுத்தார்.
அந்த நூலை மழைச்சாரல் புலனத்தின் முதல் நிகழ்ச்சியான இலக்கியச் சந்திப்பிற்கு வந்திருந்த அனைவருக்கும் இலவசமாகப் பகிர்ந்தோம்.
அந்த நூல் இராஜகுமாரன் அவர்களின் மனதை எந்த வகையில் பாதித்தது என்று தெரியவில்லை. அன்று நிகழ்ச்சி முடிந்து போகும் போது அவரின் முகம் இறுக்கமாக இருந்தது. அதன் பின் அவருடன் நடந்த உரையாடல்களில் ஒரு முறை கூட அந்த நூல் குறித்து அவர் பேசவில்லை. நானும் மறந்தும் அதனைத் தொட்டு பேசியதில்லை.
அவருக்கு ஏதும் கோபம் இருக்கலாமென்ற ஐயத்தில் ஒரு தரம் அவர் மகள் தாராவிடம் கேட்டிருந்தேன்.
“அப்படி ஏதும் இல்லை அக்கா, உங்களிடம் அப்பாவிற்கு ஒரு கடன் இருக்கிறதாம். அதனை நிறைவேற்றிய பின்தான், அவர் அந்த நூலை வாசிப்பாராம்” என்றார். அதுபோன்றே அவரின் மறைவிற்கு இரு மாதங்களுக்கு முன்பாக அவரின் கடனைத் தீர்த்த பின்னர் 'இலக்கியத்தில் ஒரு ஞானரதத்தை' வாசித்தார்.
அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்த சூழலில் அந்த நூல் குறித்த விமர்சனத்தை வைத்தார். கட்டுரையாளர்கள் அனைவருக்கும் நன்றி கூற சொன்னார். மீண்டும் அவரை நான் வணங்கிய தருணம் அது.
மரணத்தின் அழைப்பு!
---------
17/11/17 இல் நான் பணியில் இருந்த ஒரு காலை பொழுதில் இராஜகுமாரன் அவர்களிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. எவ்வித அறிவிப்பும் இன்றி என் வட்டத்தில் உள்ளவர்கள் என்னை அழைக்க மாட்டார்கள் என்பது எழுதாத விதி . அதனை மீறி அவர் அழைத்திருக்கின்றார் என்றால் ஒன்று 'அழைக்கலாமா' என்ற அவரின் குறுஞ்செய்தியை நான் பார்க்கவில்லை அல்லது மிக அவசரமான சூழல் என்று பொருள்.
பணி நேரம் என்பதால் அந்த அழைப்புகள் தவறிய அழைப்புகளாகிப் போயின. இரு முறை அழைப்பு வந்து நின்றது.
என் தனிப்புலனத்தைத் திறந்துப் பார்த்தேன். நினைத்தது போன்றே. " வணக்கம். நலமா?" என்ற முகமன்னுடன் " முக்கியமான தகவல் சொல்ல வேண்டும். எப்போது அழைக்கலாம்?" என்ற கேள்வியும் இருந்தது.
" மன்னியுங்கள், சார். பணி முடிந்ததும் அழைக்கிறேன் " என்ற பதில் அனுப்பி வைத்தேன்.
அன்று நான் காலை பணியில் இருந்ததால் இரண்டு மணிக்கு பணிமுடிந்தபின்பே அவரை அழைத்தேன். தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நூல் நிதி குறித்து திரு. பன்னீர்செல்வம் அவர்கள் பேசியதாகச் சொன்னார். மழைச்சாரல் வெளியிட்ட பத்து நூல்களுக்கும் நிதி கிடைத்திருப்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்தார். எங்கள் உரையாடல் முடிவுறும் தருணத்தில் காலையில் அவர் கனவு கண்டதாகவும் அதற்கு விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.
"என்னிடமா? "சிரித்தேன்.
"கனவு பலன் நல்லா சொல்வீங்களே, இந்தக் கனவுக்குப் பலன் சொல்லுங்க' என்றார் . பின்பு , "இதுவரையில் எங்கப்பா கனவில் வந்ததில்லை. நேற்று வந்தார். ரொம்ப வினோதமான கனவாக இருந்தது" என்றவர், சுருக்கமாக அக்கனவைச் சொன்னார்.
கேட்டதும் மனதில் ஏனோ பதட்டம் ஏற்பட்டது. மௌனமாக இருந்தேன்.
" ஏன் அமைதியாக இருக்கிங்கள்?"
அவர் அப்படி கேட்டதும் அப்போதைக்கு எனக்குத் திடீரென்று தோன்றியதைச் சொல்லிச் சமாளித்தேன்.
" நாளை அமாவாசை. அமாவாசையில் இறந்தவர்கள் கனவில் வருவார்கள் என்பார்கள் "
" அப்படியென்றால் ஏன் இதுவரை வரவில்லை? "
"அவர்களுக்கு வழிபாடு செய்யச் சொல்லி நினைவுறுத்த வந்திருக்கலாம்" என்றேன்..
" என்கிட்ட போய் வழிபாடு பற்றிப் பேசலாமா? " என்று சிரித்தார்.
அவர் கொள்கை அறிவேன் . நானும் சிரித்தேன்.
" சரி, உங்களுக்கு நேரமாகும், கிளம்புங்கள். அந்தக் கனவுப் பற்றி விரிவாக எழுதி உங்களுக்கு அனுப்புகிறேன் " என்றார்.
நான் கிளம்பினேன். வழியெல்லாம் அக்கனவு மனதை உறுத்தியது. அது மரணத்திற்கு விடப்படுகின்ற அழைப்பு போல் உணர்ந்தேன் .
என்னிடம் அவர் கனவுபலன் கேட்பதற்கு ஒரு காரணம் இருந்தது.
மழைச்சாரல் புலனத்திற்காக தொடர்கதை ஒன்றை எழுதினேன். அக்கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் முதலில் இராஜகுமாரன் அவர்களின் பார்வைக்கு அனுப்பிய பின்பே குழுவிற்கு பகிர்வேன். என் முதல் வாசகர் அவர் தான். இருபது அத்தியாயம் வழி அவை தொடர்ந்தன. ஓர் அத்தியாயத்தில் முழுதும் கனவுகள் சார்ந்து எழுதியிருப்பேன். அந்த அத்தியாயத்தை வாசித்தபோது சிறப்பாக இருப்பதாகக் கருத்துரைத்திருந்தார். அதோடு " உங்களுக்கு கனவு சாஸ்திரம் தெரியுமா? கனவுப் பற்றி நல்லா எழுதியிருக்கிறீர்களே " என்றார். அதன் தொடர்பில் அவர் இக்கனவை என்னிடம் சொல்ல நினைத்திருக்கலாம்.
நான் வீடு திரும்பும் அவகாசத்தில் அவர், அக்கனவை ஒரு கதைப் போன்று எழுதி எனக்கு அனுப்பியிருந்தார்.
°°°°°°°°°
ஒரு மறையும் கனவு - மறக்கும் கனவு.
இன்று காலை ஐந்து மணிக்கு விழித்து ஆறு மணி வரை டேப்லட்டில் வீடியோ பார்த்து ஆறு மணிக்கு உறங்கியபோது இந்தக் கனவு வந்தது......
எங்கே, எந்த இடம் என்று தெரியவில்லை.
மறைந்த என் தந்தையின் உடல் பாடம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக அறிந்து அந்த இடத்துக்கு நாங்கள் செல்கிறோம். அந்த நாங்களில் என் அம்மாவும் என் சகோதரர் ஆதியும் இருந்ததாக நிழல்போல் நினைவு.
என் தந்தையார் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றதும் அந்த வீட்டின் அல்லது கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்தில் மேல் மறைப்பு இல்லாத அறையில் வைக்கப்பட்டிருந்த எங்கள் அப்பாவைப் பார்க்கிறோம். அவர் உடல் வெள்ளைத் துணியால் சுருட்டப்பட்டு ஒரு மேடையில் அல்லது நீள் மேஜையில் வைக்கப்பட்டுள்ளது. முகமும் கால்களும் மட்டுமே தெரிகிறது. தலை அவர் வலப்பக்கம் திரும்பி இருக்கிறது.
நான் மட்டும் அறையில் நுழைகிறேன். எப்படி இறங்கிச் சென்றேன் என்று தெரியவில்லை. அவர் இடப்பக்கம் நெருங்கியபோது அவர் முகம் ஏற்கனவே இடப்பக்கம் திரும்பி இருப்பதைக் கவனிக்கிறேன்.
இது எப்படி என்று எண்ணம் ஓடுகிறது.
அவர் தலையும் முகமும் பெரிதாக இருக்கிறது. முகம் எந்த வாட்டமும் இல்லாமல் உறங்குவது போல் உள்ளது. மேலே இருந்து பார்த்தபோது வழக்கம்போல் இருந்த முகம் எப்படி பெரிதானது என்ற யோசனை எனக்குள். அவர் முகம் வலம் இடமாக சில தடவை திரும்பிவிடுவதையும் பார்க்கிறேன். அவரைப் பார்க்க அறைக்குள் வந்தபோதே மனதுள் பயம் இருந்தது. அந்தக் கனவில் எனக்கு இருபது முப்பது வயதிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது். பயத்தோடு அவர் உடலருகே இன்னும் நெருங்குகிறேன். அவரது இரு கரங்களும் சட்டென்று வலுவாகப் பற்றி என்னை இழுக்கின்றன. அவர் கைகள் வழக்கத்தைவிடப் பருமனாக இருக்கின்றன. நான் திமிறி விடுபடுகிறேன். அடுத்து நான் மேலே என்னோடு வந்தவர்களுடன் நிற்கிறேன். எப்படி வந்தேன் என்று தெரியவில்லை.
கீழே பார்க்கும்போது மேடையில் அப்பாவைக் காணவில்லை. இதன்பிறகு கனவு சரியாக நினைவில்லை. அப்பா உடலைக் காணவில்லை என்று நாங்கள் சிலரிடம் புகார் செய்ய மீண்டும் அங்கு வைக்கப்படும் என்று சொல்வதாக நினைவு. அதன்பிறகு தெளிவில்லாத சம்பவங்களுடன் கனவு மறைய நான் தூங்கிவிட்டேன்.
அண்மையில் நான் பினாங்கு சென்றபோது என் அப்பா காவலாளியாக வேலை செய்த பள்ளிக்குள் சென்று பார்த்தேன். என் அப்பா வேலைசெய்தபோது1968 இல் சென்று தங்கிய பிறகு அவர் மறைந்த பிறகு சில தடவை பள்ளி வெளியே இருந்து பார்த்திருக்கிறேன். சரியாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்குள் அலுவலகக்கூடம் வரை இப்போது சென்றேன். ஒரு மலாய்க்கார அம்மையார் கவலாளியாக இருக்கிறார். பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக அவர் சொன்னார்.
இளம் வயதில் பெரிய கட்டிடமாகத் தோன்றியது இப்போது கொஞ்சம் சிறியதாகத் தோன்றியது. அலுவலகப் பகுதியில் அதிக மாற்றம் இல்லை. மாடிக்கு நாங்கள் ( நானும் ஆதியும் ) சென்ற நினைவில்லை.
அந்தப் பள்ளி நினைவில் இன்று இந்தக் கனவு வந்ததா?. அல்லது சில நாட்களுக்கு முன் கைப்பேசியில் உள்ள படங்களைப் புரட்டியபோது நானும் அப்பாவும் -என் பதின்ம வயதில்- (பதினெட்டு வயதாக இருக்கலாம்) வேறு இருவருடன் அருகருகே நிற்கும் படத்தைப் பார்த்தேன். அந்த நினைவில் இந்தக் கனவா? அண்மையில் நடந்த மலேசிய பாரதி மன்ற கூட்டத்தில் சான்றோராக கவிஞர் வீரமான் உரையாற்றினார். அவர் பினாங்கில் வளர்ந்தவர், என் அப்பாவுடன் பழகியவர் என்பது அன்றுதான் எனக்குத் தெரிய வர அவரோடும் திரு அசன்கனி அவர்களோடும் என் அப்பா பற்றி பேசி அறிந்தேன். அந்த நினைவுகளா இந்தக் கனவு. தெரியவில்லை.
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அவரைக் கனவில் காண்கிறேன். இருபது ஆண்டுக்கு முன்பு வந்த அந்தக் கனவில் என் அப்பா நடந்து செல்கிறார். நான் அப்பா... அப்பா என்று அவரை அழைக்கிறேன். அவர் திரும்பிப் பார்க்காமல், திரும்பிப் பார்க்க விரும்பாமல் செல்கிறார். நான் எவ்வளவோ கெஞ்சியும் அழுதும் மன்னிப்பு கேட்டும் அவர் திரும்பவே இல்லை. அதன்பிறகு என் கனவில் வரவே இல்லை.
அப்பா மீது எனக்கு அன்பும் மதிப்பும் மிக அதிகம். அவரை நினைக்கும்போது இப்போதும் மனம் நெகிழ்கிறது. அவர் தமிழகத்தில் 1975இல் மறைந்தபோது நானும் ஆதியும் மலேசியாவில் இருந்தோம். என் சகோதரி வீட்டில் அவர் குடும்பத்தார், ஆதி அருகில் இருக்க நான் மட்டும் கதறி அழுதேன். இப்போதும் என் கண்கள் கலங்குகின்றன.
என் அப்பா மாபெரும் மகத்தான மனிதர். தலைவர். அறிஞர். தந்தை பெரியார் பற்றாளர். எங்கள் இருவரையும் பகுத்தறிவு வழிப்படுத்தியவர். எங்களுக்காக பாடுகள் பட்டவர். எங்கள் படிப்பும் அறிவும் அவர் தந்தது.
எங்களிடம் இருந்து பலன்கள் அனுபவிக்காதவர். எனக்கு ஏழெட்டு வயதாக இருந்தபோது எங்களைத் தமிழகத்தில் விட்டு விட்டு அவர் மலையகம் புறப்பட இருந்தபோது ஒரு நாள் ஒரு தெரு முனையில் அவரைக் கட்டிக் கொண்டு அந்தப் புரியாத வயதில் போகாதீர்கள் அப்பா என்று அழுதேன். அவர் என்னைத் தூக்கி ஏதோ ஆறுதல் சொன்னார்.
என் தந்தை அன்பு மிக்கவர். இரக்க மனம் உள்ளவர். ஆனால் மிக்க கடுமையான கோபக்காரர். ஏன் எதற்கு என்று தெரியாமல் அவருக்கு கோபம் வந்து விடும். என்னை மிக மோசமான வார்த்தைகளில் வறுத்தெடுத்து விடுவார். சிறு வயதில் அவர் வார்த்தைகள் என்னைத் தைக்காது. அப்போது நான் மிக சாந்த சொரூபி. அமைதியானவன். கோபமே வராது. ஆனால் வளர வளர எனக்கும் கோபம் வந்தது. அவரை ஒரு தடவை எதிர்த்து நின்றேன்.
அதன்பிறகு நாங்கள் பார்த்துக்கொள்ளவோ பேசிக் கொள்ளவோ இல்லை.
இப்போதுகூட, கனவில் கூட அவரோடு பேச முடியவில்லை!
-ஆதி. இராஜகுமாரன் (17.11.2017)
°°°°°°°°°°°
இந்தக் கனவிற்கு பிறகு சில மாதங்களில் அவரின் உடல் நிலையில் பாதிப்பு நிகழ்ந்தது. அன்றைய நாளை (13.2.2018) என்னால் மறக்க இயலாது. பணி முடிந்து வீடு திரும்பிருந்த மாலை நேரம் அது. இராஜகுமாரன் அவர்களிடமிருந்து திடீர் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுப் பேசினேன்.
“வணங்கங்க, வீடு திரும்பிட்டீங்களா?”
“வணக்கம் சார். வீட்டில் தான் இருக்கிறேன்"
“சாப்பீட்டிங்களா? ஓய்வாக இருக்கிறீர்களா?” என்றார் , குரல் பிசகி.
“ஏன் சார் , குரல் வேறு மாதிரி இருக்கிறது. உடம்பிற்கு என்ன?" நான் பதட்டத்துடன் வினாவினேன்.
“ஓ.. குரலில் வித்தியாசம் தெரிகிறதா? எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. மயக்கம் வந்து கீழே விழுந்திருக்கிறேன்.எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று தெரியவில்லை. தாரா வந்து பார்த்து , கத்தியப் பின் தான் கண் விழித்தேன். இப்போது நான் என்ன செய்யணும். இதுக்கு என்ன முதல் உதவி” என்றார்.
எனக்கு திக் கென்றது. முதல் உதவி என்பதெல்லாம் மறந்து போனது.
“முதலில் குளிர்ந்த நீர் பகிருங்கள். அருகில் யார் இருக்கிறார்கள்? தாரா இருந்தால் அவரிடம் போனை கொடுங்கள்” என்றேன்.
தாரா கலக்கத்தோடு “அக்கா’ என்றார். அவரிடமும் குடிக்க நீர் தரச் சொன்னேன். அப்பாவிற்கு அடி பட்டுள்ளதா, சிறுநீர் ஏதும் கழித்துள்ளாரா என்று வினாவினேன்.
“அடிப்பட்டது போல் தெரியவில்லை அக்கா. சிறுநீர் கழித்துள்ளார். ஆனால் அவரால் எழ முடியவில்லை” என்றார்.
‘தாமதம் செய்யாமல் ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்யுங்கள். மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்” என்றேன்.
அதனை கேட்டது அவர் உடனே போனை வாங்கி, “எனக்கு ஒன்றும் இல்லை. நீர் அருந்தியப் பின் நல்ல இருக்கிறது. என்னா, எழுந்திரிக்க முடியவில்லை. நண்பருக்கு தகவல் சொல்லி கிளினிக் போகிறேன்” என்றார்.
“ வேண்டாங்க சார். நீங்கள் மருத்துவமனைக்குப் போவது தான் சரி. அவசியம் போங்கள்” என்றேன். அவர் வழக்கமாக முரண்படுவது போன்றே அன்றும் முரண் பட்டார்.
பின்பு தாராவிடம் அண்டை வீட்டாரின் உதவியுடன் அவரைத் தூக்கிக் கட்டிலில் அமர வைக்க சொன்னேன். அவரின் உடலில் என்ன நேர்ந்திருக்கிறது என்று அறிய மருத்துவமனை போவது தான் நல்லது என்று வழியுறுத்தினேன்.
மாலையில் கிளினிக் சென்று வந்தும் என்னை அழைத்து , இனிப்பின் அளவு அதிகமாக உள்ளதால் மயக்கம் வந்துள்ளது என்றார். அவரின் உடலின் உணமையான பாதிப்புநிலை உணராமல்.
“ஏதற்கும் ஒருமுறை மருத்துவமனைக்குச் செல்லுங்கள்” என்று வேண்டினேன். “பார்க்கலாம்” என்றார்.
அன்று இரவு எழு மணி போல் மீண்டும் அப்படி நிகழ, தாரா அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்தார். அதன் பின் தொடர்ச்சியாக உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்தது. ஆனாலும் அவர் அனைத்தையும் திடத்துடன் ஏற்றதும் உற்சாகமாக இருந்ததும் பெரும் வியப்பு.
இறுதி உரையாடல்
--------
இராஜகுமாரன் அவர்கள் மறைவதற்கு ஒரு வாரம் இருக்கையில், 18.8.2018 தேதியன்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அதுவே இறுதிச் சந்திப்பு . நான் சென்றிருந்தபோது ஒரு குழந்தையைப் போன்று சுருண்டுப் படுத்திருந்தார். அவர் எழும் வரை அமைதியாகக் காத்திருந்தேன். அரைமணி நேரத்திற்கு பின் தாதியர் ஒருவர் வந்து அவரை எழுப்ப கண் விழித்தார். என்னைக் கண்டது முகத்தை மலர்த்தி ‘வாங்க’ என்றார்.
நோயின் தளர்ச்சி விழிகளில் கொஞ்சமும் இல்லை.
என் நலத்தை விசாரித்தார். தலைநகரில் பயற்சியில் இருந்த என் மகளின் தாதிமை பயற்சி அன்றோடு முடிவதை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
“இன்றே மகளை அழைத்துப் போய் விடுவீர்களா?” .
“ ஆமாங்க சார் , மாலையில் புறப்பட்டுவிடுவோம்”
அன்று தான் அவர் எதிரில் அமர்ந்து நேராக அவர் முகம் பார்த்து நீண்ட நேரம் உரையாடினேன். மழைச்சாரல் குழுவில் தோன்றும் குழப்பங்களையும் எனக்கு ஏற்படும் இலக்கிய நெருக்கடிகளையும் அலைப்பேசியிலேயே பேசி பகிர்ந்துள்ளேன். அச்சமயங்களில் எல்லாம் அனைத்தையும் அமைதியாக கேட்பார். அவசியம் என்றால் ஆறுதல் மொழிகளைச் சொல்வார். பின்னர் நிதானமாக அதற்கான தீர்வை வழங்குவார்.
அன்றும் மழைச்சாரல் குழுவைப் பற்றி விசாரித்தார். ‘சமீபத்தில் என்ன கதை எழுதினீர்கள்’ எனக் கேட்டார்.
சில கவிதைகளை வாசித்துக் காட்ட சொன்னார். இடையிடையே அருந்த பால், நீர் கேட்டார். சாப்பிட பழங்களை உரித்து கொடுக்கச் சொல்லி 'இப்படி யாராவது இலக்கியம் பேசிக்கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டே கொஞ்சம் சாப்பிடலாம்' என்றார்.
அன்றைய மணித்துளிகளில் வழக்கம் போலவே படபடப்பாகப் பேசும் பாவத்துடன் நானும் என் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டும் பின் நிதானமாக பதிலுரைத்துக் கொண்டிருந்த அவரும் கொஞ்சமும் உணரவில்லை, அதுவே எங்களுக்கிடையிலான இறுதி உரையாடல் என்று.
அன்று நானும் மகளும் விடை பெற்றபோது இரவாகியிருந்தது. பேருந்திற்கு நேரம் ஆகி விட்டதால் நாங்கள் அவசர அவசரமாக அவரிடமிருந்து விடை பெற்றோம். புன்னகையுடன் விடை பெற முடியவில்லை.
பயற்சி இல்லாத நாட்களில் இராஜகுமாரன் அவர்களைக் காண என் மகள் செல்வார். அவரைக் காண செல்லும் போதெல்லாம் “என்னை பார்க்கப் புன்னகையோடு அல்லது ஒரு ரோஜாப்பூவோடு வாருங்கள். கவலையோடும் கண்ணீரோடும் வராதீர்கள்’ என்பாராம்.
இறுதி வரையில் தன்னை சுற்றி உள்ளவர்கள் அவருக்காக துயரப் படக்கூடாது என்றே எண்ணியிருந்தார். அதன் பொருட்டு தான் அவரின் அன்பிற்குப் பாத்திரமான பலரை அவர் சந்திப்பதை தவிர்த்தார் என்பது நானறிந்த உண்மை. தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் தீர்மானித்ததை போன்றே தனது நோய்யுற்ற இறுதிக் காலத்தை எப்படி முடிப்பது என்பதையும் அவரே முடிவு செய்திருந்தார். அதன் படியே அனைத்து நடந்ததாக உணர்கிறேன்.
![]() |
| என் மகளுடன் ஆதி இராஜகுமாரன் |
முற்றும்
***




இன்னும் கொஞ்சம் அவருடன் இலக்கியம் பழகியிருக்கலாம் அவருடன். செய்யவில்லை. தூரத்து நிலாவாய் 'ஹா'வென்றே அவரின் இலக்கிய முகத்தைத் தரிசித்துப் பழகி விட்டது. ஞான ரதம் என்று தெரிந்தே விட்டு விட்டோம் அவரை.
பதிலளிநீக்குவாழும் காலத்தில் நான் கண்ட மனித கடவுள்,எனது ஆசான். இவரைப் போன்ற ஒரு மாமனிதரை இனி நாம் காண்போமா என்பது கேள்விக்குறியே.....
பதிலளிநீக்கு